ஹைதராபாத்தில் கோலாகலமாகத் தொடங்கும் 12-வது தெலுங்கானா கோல்கொண்டா மாஸ்டர்ஸ் கோல்ஃப் போட்டி

ஹைதராபாத்தில் செப்டம்பர் 1 முதல் 4 வரை 12-வது தெலுங்கானா கோல்கொண்டா மாஸ்டர்ஸ் கோல்ஃப் போட்டி நடைபெற உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டையின் பின்னணியில், புகழ்பெற்ற 12-வது தெலுங்கானா கோல்கொண்டா மாஸ்டர்ஸ் கோல்ஃப் போட்டி செப்டம்பர் 1 முதல் 4 வரை நடைபெற உள்ளது. ஹைதராபாத் கோல்ஃப் சங்கத்தின் மைதானத்தில் நடைபெறும் இந்த நான்கு நாள் போட்டியில், இந்தியாவின் முன்னணி கோல்ஃப் வீரர்கள் உட்பட சர்வதேச அளவில் திறமையான வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையைக் கொண்ட இந்தப் போட்டி, அதிகாரப்பூர்வ உலக கோல்ஃப் தரவரிசைப் புள்ளிகளைப் பெறுவதற்கான முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்தத் தொடர் குறித்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜுபல்லி கிருஷ்ணாராவ் மற்றும் டிபி வேர்ல்ட் பிஜிடிஐ தலைவர் கபில் தேவ் ஆகியோர் இணைந்து அறிவிப்பை வெளியிட்டனர். இதில் மொத்தம் 132 வீரர்கள் களமிறங்குகின்றனர். இந்தப் போட்டியானது 'ரேஸ் டு டிபி வேர்ல்ட் இந்தியா சாம்பியன்ஷிப்' தொடரின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. இந்தத் தொடரின் முடிவில், பிஜிடிஐ ஆர்டர் ஆஃப் மெரிட் பட்டியலில் முதல் 24 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், சீசன் இறுதியில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சப்தக் தல்வார், ஹனி பைசோயா, வீர் அஹ்லாவத், ரஷீத் கான், அக்ஷய் சர்மா மற்றும் ஓம் பிரகாஷ் சௌஹான் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். நடப்பு சாம்பியனான வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமால் ஹொசைன் தனது பட்டத்தைத் தக்கவைக்க மீண்டும் களமிறங்குகிறார். மேலும், இலங்கை, நேபாளம், ஜப்பான், உகாண்டா மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச வீரர்களும் இந்தத் தொடரில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அசார், விஷேஷ் சர்மா மற்றும் ரூபிந்தர் சிங் கில் ஆகியோர் உள்ளூர் வீரர்களாகப் போட்டியிடுகின்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜுபல்லி கிருஷ்ணாராவ், தெலுங்கானாவில் கோல்ஃப் விளையாட்டை ஊக்கப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் ஜவஹர்நகர் மற்றும் சோமசிலா ஆகிய இடங்களில் உலகத் தரம் வாய்ந்த புதிய கோல்ஃப் மைதானங்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கிருஷ்ணா நதிக்கரையோரம் அமரபாத் புலிகள் காப்பகத்திற்கு அருகில் அமையவுள்ள சோமசிலா கோல்ஃப் திட்டம், பொது-தனியார் பங்களிப்பு (பிபிபி) முறையில் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாநிலத்தை உலகளாவிய கோல்ஃப் சுற்றுலா மையமாக மாற்ற அரசு முனைப்பு காட்டி வருகிறது.









