1996 தூத்துக்குடி கலவரம்: 30 ஆண்டுகளாக நீடிக்கும் இழப்பீடு இழுபறி - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

1996 தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கத் தாமதம் செய்த தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது குறித்து உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வி.என். பாட்டி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மூன்று தசாப்தங்களாகத் தீர்வு காணப்படாத இந்த விவகாரத்தைக் கையாள்வதில் அரசு காட்டும் மெத்தனப் போக்கை கடுமையாக விமர்சித்தது.
கலவரத்தினால் ஏற்பட்ட வணிக இழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை மதிப்பிட, அப்போது ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான இழப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்கப் பரிந்துரைத்திருந்தது. இருப்பினும், அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு, அனைவருக்கும் சமமாக தலா 2 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அரசாணையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆணையத்தின் பரிந்துரைப்படியே முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் தொடர்ந்து கால அவகாசம் கோரப்படுவது குறித்து நீதிபதி பாட்டி மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்தார். தாங்கள் பதவியில் இருக்கும் காலத்திலேயே இந்த வழக்கிற்குத் தீர்வு காண முடியுமா என்ற ஐயம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எளிய முறையில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயத்தை அரசு ஏன் இவ்வளவு காலமாகக் கிடப்பில் போட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிமன்றத்தில் அரசு காட்டும் இத்தகைய அணுகுமுறை ஏமாற்றமளிப்பதாகக் கூறிய நீதிபதி, கலவரங்களுக்குப் பிறகு ஆணையங்களை அமைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் வழங்கத் தவறுவது அந்த ஆணையத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகச் சாடினார். ஏற்கனவே இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை அரசு டெபாசிட் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், எஞ்சிய இழப்பீட்டை வழங்குவதில் ஏன் இத்தனை இழுத்தடிப்பு நடக்கிறது என்பது குறித்த விளக்கத்தை அடுத்த விசாரணையின் போது அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.









