தமிழ்நாடு, புதுச்சேரி நீதிமன்றங்களில் 2,484 ஊழல் வழக்குகள் நிலுவை: சென்னை முதலிடம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் 2,400-க்கும் மேற்பட்ட ஊழல் தடுப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் மொத்தம் 2,484 ஊழல் தடுப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்தத் தகவல்கள் நீதிமன்ற விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் மட்டும் 2,423 ஊழல் வழக்குகள் இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளன. மாவட்ட வாரியான தரவுகளைக் கவனிக்கையில், சென்னையில் அதிகபட்சமாக 359 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 140 வழக்குகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 138 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் மட்டும் 61 ஊழல் தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு ஊழல் வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தக் கோரி, ஏ. ஷாகுல் ஹமீது என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. புகழேந்தி இந்த அறிக்கையை கோரியிருந்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிய ஹமீது, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக 2021-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணை 2023-ஆம் ஆண்டு தொடங்கிய போதிலும், இதுவரை இரண்டு சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதால், வழக்கை விரைந்து முடிக்க அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
வழக்கின் விசாரணையின் போது நீதிபதி பி. புகழேந்தி, ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் பிரிவு 4(4)-ஐ சுட்டிக்காட்டினார். இதன்படி, ஊழல் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றங்கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். ஒருவேளை காலம் நீட்டிக்கப்பட்டாலும், அதிகபட்சமாக நான்கு ஆண்டுகளுக்குள் விசாரணை நிறைவு செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், தற்போது எட்டு மாவட்டங்களில் மட்டுமே சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுவதாகவும், பிற மாவட்டங்களில் முதன்மை மாவட்ட நீதிபதிகளே இந்த வழக்குகளை விசாரிப்பதால் காலதாமதம் ஏற்படுவதாகவும் நீதிபதி கவலை தெரிவித்தார். இந்த நிலை மாற, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றுவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.









