ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் கைது: மன்னார் கடற்பகுதியில் பரபரப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை சுமார் 398 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. வழக்கமான நடைமுறைப்படி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மன்னார் கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
இந்தச் சம்பவத்தில் விசைப்படகில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விசைப்படகு தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜே. ஜான் மெர்வின் என்பவருக்குச் சொந்தமானது என மீன்வளத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எஸ். பிளாசியஸ் (41), ஏ. நெல்சன் (58), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எஸ். அலகு பாண்டி (22), ஏ. அந்தோணி பிச்சை (33), ஜே. ரபீன் (21) மற்றும் பாம்பனைச் சேர்ந்த ஆர். அருளானந்த சேவியர் (65), ஏ. சகாய ஆனந்த் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் கைது நடவடிக்கை ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இத்தகைய கைது நடவடிக்கைகளும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடலுக்குச் சென்றவர்கள் மீண்டும் கரை திரும்புவார்களா என்ற அச்சம் மீனவக் குடும்பங்கள் மத்தியில் நீடித்து வருகிறது. இது தொடர்பாகத் தொடர் போராட்டங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தலையீடு கோரப்பட்ட போதிலும், கைது சம்பவங்கள் குறையாமல் இருப்பது மீனவர் சங்கங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.









