நாகப்பட்டினத்தில் சாலையோரம் கைவிடப்பட்ட எல்பிஜி டேங்கர்: பொதுமக்களின் அச்சமும், நிறுவனத்தின் விளக்கமும்

நாகப்பட்டினத்தில் கைவிடப்பட்ட பாரத்கேஸ் டேங்கர் லாரி குறித்து மக்கள் அச்சமடைந்த நிலையில், அது தண்ணீர் சேமிப்புக்காக மாற்றப்பட்டதாக தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி - திருக்குவளை பிரதான சாலையில் நீண்ட நாட்களாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த பாரத்கேஸ் எல்பிஜி டேங்கர் லாரி டிரெய்லர் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பக்க வாகனம் மற்றும் பதிவு எண் பலகை ஏதுமின்றி வெட்டவெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த டேங்கர், வெயில் காலங்களில் ஆபத்தை விளைவிக்கக்கூடுமோ என்ற கவலையில் உள்ளூர் மக்கள் உள்ளனர். குறிப்பாக, இந்தச் சாலை வழியாக பள்ளி மாணவர்கள் மற்றும் எட்டுக்குடி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் என அதிகப்படியான மக்கள் தினசரி பயணம் செய்வதால், இதன் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ஆனந்த் குமார் என்ற உள்ளூர்வாசி இது குறித்து கூறுகையில், பல மாதங்களாக எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்த டேங்கர் இங்கே நிறுத்தப்பட்டுள்ளது. பாரத்கேஸ் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்டிருப்பதால், உள்ளே எரிவாயு ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் இயல்பாகவே மக்களிடம் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக இந்த வாகனத்தை ஆய்வு செய்து, இதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பின் அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், இந்த டிரெய்லர் நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த நிறுவனத்தின் தகவலின்படி, ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தப் பணிகளுக்காக இந்த டேங்கர் டிரெய்லரைப் பெற்றுள்ளது. இது குறித்து கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் விளக்கம் அளிக்கும்போது, இந்த டேங்கர் எல்பிஜி கொண்டு செல்ல பயன்படும் நிலையில் இல்லை என்றும், இது முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு கான்கிரீட் கலவை நிலையத்திற்காக (Ready-Mix Concrete plant) தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டியாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்டுமானப் பணிகள் தாமதமானதால் இந்த டிரெய்லர் அந்த இடத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டேங்கருக்குள் எரிவாயு ஏதுமில்லை என்பதால், இது பொதுமக்களுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இருப்பினும், மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் இந்த விவகாரத்தை முறையாக ஆய்வு செய்யப்போவதாக நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது இடமான சாலையோரம் இத்தகைய பெரிய வாகனங்களை அஜாக்கிரதையாக நிறுத்துவது தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதால், சம்பந்தப்பட்ட நிறுவனம் உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.









