கோவை போத்தனூர் ரயில்வே வளாகத்தில் அத்துமீறல்: அனுமதியின்றி விளம்பரம் செய்த 10 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை போத்தனூர் ரயில்வே பகுதியில் அனுமதியின்றி விளம்பரங்கள் செய்த நிறுவனங்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூர் ரயில்வே நிலைய வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரங்கள் மற்றும் சுவரெழுத்துகளை மேற்கொண்ட நிறுவனங்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை (RPF) அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு சோதனையில், ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தி விளம்பரம் செய்ததாக மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயின் ஐஜி மற்றும் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் கே. அருள் ஜோதி வழங்கிய அறிவுறுத்தலின் பேரில், சேலம் கோட்டத்தின் பாதுகாப்பு ஆணையர் ராகேஷ் பாண்டே வழிகாட்டுதலுடன் போத்தனூர் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் பி. மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். போத்தனூர் ரயில் நிலையம், நஞ்சப்பா ரோடு, ரயில்வே காலனி, ரயில்வே யார்டு மற்றும் ரயில்வே பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.
சோதனையில் சிக்கிய நிறுவனங்கள் கல்வி நிலையங்கள், கண் கண்ணாடி கடை, விளையாட்டு உபகரண நிறுவனம், ஐஏஎஸ் பயிற்சி மையம் மற்றும் ஹார்டுவேர் கடை என பல்வேறு வணிகங்களைச் சேர்ந்தவையாக கண்டறியப்பட்டன. இந்த விதிமீறல்களில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு எதிராக உரிய சட்ட விதிகளின்படி அபராதங்கள் விதிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு, அதற்கான ரசீதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
திருத்த நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தங்கள் விளம்பரங்களை அழித்து, அந்த சுவர்களை மீண்டும் வெள்ளை அடித்து சீரமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ரயில்வே நிர்வாகத்திற்கு எவ்வித செலவும் இன்றி அந்த இடங்கள் மீண்டும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. வருங்காலங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறாமல் இருக்க ரயில்வே வளாகப் பகுதிகளில் கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும், பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தாமல் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ரயில்வே பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









