புதிய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தில் இணையும் நடிகர் வெற்றி: என்ன தலைப்பு தெரியுமா?

8 தோட்டாக்கள் புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமான என்கொயரி (Enquiry) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தைப் பெற்ற நடிகர் வெற்றி, தற்போது தனது அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என்கொயரி (Enquiry) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய படம் ஒரு விறுவிறுப்பான விசாரணை சார்ந்த த்ரில்லர் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் நடிகர் வெற்றி இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை பகிர்ந்துள்ள நிலையில், அதில் உள்ள இரத்தக் கறையின் குறியீடு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஒரு புதிய மற்றும் விறுவிறுப்பான அத்தியாயம் தொடங்குகிறது என்ற வரிகளுடன் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்த திரைப்படத்தை 2020 ஆம் ஆண்டு யோகி பாபு நடிப்பில் வெளியான காக்டெய்ல் படத்தை இயக்கிய முருகன் ராஜேந்திரன் இயக்குகிறார். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக கே.கே, இசையமைப்பாளராக விபின் பாஸ்கர் மற்றும் படத்தொகுப்பாளராக பிஜு வி. டான் பாஸ்கோ ஆகியோர் பணியாற்றுகின்றனர். கலை இயக்கத்தை சுரேஷ் கல்லெரி மற்றும் சாக் ஸ்ரீஜி கவனிக்கின்றனர். படத்தின் கதைக்களம் மற்றும் இதர நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. தயாரிப்பு தரப்பினர் விரைவில் கூடுதல் தகவல்களை வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்கொயரி திரைப்படம் ஆன் தி டேபிள் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். மலையசாமி ஏ.எம். ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். நடிகர் வெற்றிக்கு இது போன்ற இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் கதைகள் புதிதல்ல என்றாலும், மீண்டும் அதே பாணி படத்தில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு வெளியான லக்ஷ்மிகந்தன் கொலை வழக்கு திரைப்படம் மூலம் ரசிகர்களைச் சந்தித்த வெற்றி, தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் வெற்றியின் நடிப்பில் அடுத்து பிளாக் கோல்ட் திரைப்படம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுதவிர, பரிட் (Buried) என்ற விசாரணை சார்ந்த த்ரில்லர் படம் மற்றும் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ள இரவு (Iravu) போன்ற படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் வெற்றி, என்கொயரி படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றிகரமான த்ரில்லர் கதையைத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









