ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தளம்: மழைநீரால் பாதிப்பா? விளக்கம் அளித்த இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை

தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தளத்தில் மழையினால் தொல்பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எழுந்த புகாரை ஏஎஸ்ஐ மறுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள், சமீபத்திய மழையினால் பாதிப்பிற்குள்ளானதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் தொல்லியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அக்டோபர் 8 ஆம் தேதி பெய்த திடீர் மழையின் காரணமாக, அகழ்வாராய்ச்சி குழிகளில் மழைநீர் தேங்கியது. அங்கு அமைக்கப்பட்டு வரும் நிரந்தரக் கூரை கட்டுமானப் பணிகள், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் நிலுவையில் உள்ள ஊதியம் காரணமாகத் தாமதமாவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழல் வரலாற்றுச் சின்னங்களைச் சேதத்திற்கு உள்ளாக்கலாம் என்ற கவலை எழுப்பப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். தமிழர்களின் வரலாற்றையும் தொன்மையான அடையாளங்களையும் பாதுகாப்பதில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI) அலட்சியம் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இப்பணிகளை விரைந்து முடித்து, விலைமதிப்பற்ற இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொல்லியல் தளங்களைப் பாதுகாப்பதில் தொடரும் இத்தகைய மெத்தனப் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தளத்தின் பொறுப்பாளர் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் அரவழிகூறுகையில், அகழ்வாராய்ச்சி தளத்தில் உள்ள எந்தவொரு தொல்பொருளும் மழையினால் சேதமடையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். தற்காலிகக் கூரைகளை அகற்றிவிட்டு, நிரந்தரக் கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் மட்டும் மழைநீர் தேங்கியதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட இரும்புப் பொருட்கள் உள்ளிட்ட முக்கியத் தொல்பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தளத்தில் உள்ள வரலாற்றுச் சான்றுகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூரை அமைக்கும் பணி மிக விரைவாக நிறைவு செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.









