dhina anjal logo
முகப்பு/இந்தியாதமிழ்நாடு

அகஸ்தியமலை வனப்பகுதி ஆக்கிரமிப்பு: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை; துணை ராணுவப் படையை குவிக்க நேரிடும் என அறிவிப்பு

By Admin
20/08/2026
67 views
அகஸ்தியமலை வனப்பகுதி ஆக்கிரமிப்பு: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை; துணை ராணுவப் படையை குவிக்க நேரிடும் என அறிவிப்பு

அகஸ்தியமலை உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் துணை ராணுவப் படையை ஈடுபடுத்த நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டின் அகஸ்தியமலை சுற்றுச்சூழல் மண்டலத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாவிட்டால், அந்தப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவும் துணை ராணுவப் படைகளை ஈடுபடுத்த நேரிடும் என நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய் தீப் குப்தா, புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைமுறைகளாக வசித்து வருவதாகவும், அந்தப் பகுதிகளில் இலவம் பஞ்சு (kapok) சாகுபடி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இப்பகுதியில் செயல்பட்டு வந்த விடுதிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுவிட்டதாகவும், உரிய கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கோரினார்.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், விடுதிகளை மூடுவது மட்டும் போதுமானதல்ல, அவை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினர். குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இலவம் பஞ்சு பயிரிடுவதை முற்றிலும் கைவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை உடனடியாகத் துண்டிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்த நீதிமன்றம், இது தொடர்பான விரிவான நிலை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவு, தேனி மாவட்டம் மேகமலை பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், தங்களுக்குப் பல தலைமுறைகளாக இருக்கும் குடியிருப்பு உரிமை மற்றும் விவசாய நிலங்களைக் காக்கப் போராடுவோம் எனத் தெரிவித்துள்ளனர். நாடியூத்து மற்றும் வருசநாடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர். வைத்தீநாதன், நீதிமன்றத்தின் முழுமையான உத்தரவு நகல் வந்த பிறகு, அரசுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#அகஸ்தியமலை
#உச்சநீதிமன்றம்
#வனப்பாதுகாப்பு
#தமிழகசெய்திகள்
#மேகமலை
#Agasthyamalai
#SupremeCourt
#ForestConservation
#TamilNaduNews
#Megamalai
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications