dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

By Admin
02/09/2026
74 views
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பைத் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு, பின்னர் ஆளும் கட்சியில் இணைந்ததாகக் கூறப்படும் எஸ். ஜெயக்குமார், மரகதம் குமரவேல், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய ஆறு எம்எல்ஏக்களின் ராஜினாமா தொடர்பான வழக்கு இதுவாகும். தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய முதல் அமர்வு முன் இந்த விசாரணை நடைபெற்றது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வி. கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆகியோர், இந்த ராஜினாமாக்கள் குதிரை பேரத்தின் விளைவாகவும், பல்வேறு சலுகைகளால் தூண்டப்பட்டும் நடந்துள்ளதாக வாதிட்டனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 190 (3) (பி) பிரிவின்படி, சபாநாயகர் முறையான விசாரணை நடத்தி, அந்த ராஜினாமாக்கள் சுயவிருப்பத்துடன் தான் வழங்கப்பட்டதா என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்றும், இதில் சபாநாயகர் தவறு செய்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்தச் செயல்முறை நியாயமற்றது மற்றும் காரணமற்றது என்றும் மனுதாரர் தரப்பில் பதிவு செய்யப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் தங்களது வாதங்களை முன்வைத்தனர். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்ய விரும்பும் போது, அவரைப் பதவியில் தொடருமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று சி.எஸ். வைத்தியநாதன் வாதிட்டார். உறுப்பினர் ஒருவர் தன் விருப்பத்துடன் ராஜினாமா செய்யும் போது, அதன் உள்நோக்கம் குறித்துச் சபாநாயகர் விசாரணை நடத்தத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியல் உள்நோக்கம் என்பது விசாரணை எல்லைக்கு அப்பாற்பட்டது என்று விஜய் நாராயண் வாதிட்டார்.

இதற்கிடையில், இசக்கி சுப்பையா தரப்பு வழக்கறிஞர், தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சபாநாயகரிடம் ஆகஸ்ட் 28-ஆம் தேதியே மனு அளித்ததாகத் தெரிவித்தார். இடைத்தேர்தல் நீதிமன்றத் தடையால் தள்ளிப்போயுள்ள நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி மக்கள் பிரதிநிதி இல்லாமல் இருப்பதைத் தவிர்க்கவே தான் மீண்டும் பதவியில் நீடிக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த கூடுதல் மனுவை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில், அதனை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றம் தனது தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#சென்னைஉயர்நீதிமன்றம்
#அதிமுக
#சபாநாயகர்
#எம்எல்ஏக்கள்ராஜினாமா
#தமிழகஅரசியல்
#MadrasHighCourt
#AIADMK
#TamilNaduPolitics
#Speaker
#LegalNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications