ஆம்பூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு: புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடிநீர் தொட்டி கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள சின்ன கொம்மேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டக்கோரி மதனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே சுமார் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பழைய தண்ணீர் தொட்டி மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அது இடிக்கப்பட்டது. எனினும், அந்தத் தொட்டி இடிக்கப்பட்ட பிறகு, மாற்று ஏற்பாடுகள் எதையும் அதிகாரிகள் செய்து தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் தெருவில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதாகவும், சில பிரச்சனைகள் காவல் நிலையம் வரை சென்றிருப்பதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய கிராம மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மதியம் அலுவலகத்திற்கு வருகை தந்த வட்டார வளர்ச்சி அலுவலர், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இது தொடர்பாக மதனுார் வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த விளக்கத்தில், பழைய தண்ணீர் தொட்டி மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதற்கென புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான திட்ட முன்மொழிவு நபார்டு வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்து, அடுத்த ஒரு மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.









