அமீர் நடிக்கும் புதிய படம் மாகாளி: மாரி செல்வராஜ் தயாரிப்பில் உருவாகும் சுவாரஸ்யமான தகவல்

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிப்பில் நடிகர் அமீர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மாகாளி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குநர் மற்றும் நடிகர் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு மாகாளி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குநரான மாரி செல்வராஜ் தனது மனைவி திவ்யா மாரி செல்வராஜுடன் இணைந்து தனது நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) பேனரில் தயாரிக்கிறார். இவர்களுடன் இணைந்து அய்யங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கே. கருணாமூர்த்தியும் இந்தத் திரைப்படத்தை தயாரிப்பதில் இணைந்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநரான எஸ்.பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மாரி செல்வராஜின் வழிகாட்டுதலில் வளர்ந்து வரும் திறமையான கலைஞரான எஸ்.பி. அரவிந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.
மாகாளி திரைப்படத்தில் அமீருடன் இணைந்து ஸ்வசிகா மற்றும் யூத் புகழ் அனிஷ்மா அனில் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பிரதீபன் செல்வ ரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை செல்வா ஆர்.கே மேற்கொள்ள, கலை இயக்குநராக ராமு தங்கராஜ் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை திலிப் சுப்பராயன் அமைக்கிறார்.
அமீர் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி ஏற்கனவே பிசன் காளமாடன் திரைப்படத்திற்காக இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் மாகாளி இவர்களது கூட்டணியில் உருவாகும் மற்றொரு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அமீர், அருள்நிதியுடன் இணைந்து வேட்டை சாமி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல், மாரி செல்வராஜ் தற்போது இளையராஜாவின் இசையில் பிரியங்கா மோகன் மற்றும் காயடு லோஹர் நடிப்பில் உருவாகும் மஞ்சனத்தி திரைப்படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.









