ஆனைக்கட்டி சொகுசு விடுதிகள் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை தீவிரம்

ஆனைக்கட்டி பகுதியில் உரிய அனுமதியின்றி செயல்படும் 8 சொகுசு விடுதிகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் முறையான திட்டமிடல் அனுமதி மற்றும் அரசு சான்றிதழ்கள் இன்றி செயல்பட்டு வரும் எட்டு சொகுசு விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த விடுதிகளை மூடுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் தலைமையிலான அதிகாரிகள் குழு முன்னெடுத்துள்ளது. இதற்காக வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட விடுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தியதோடு, நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தெரிவிக்கும் நோட்டீஸ்களையும் வழங்கியுள்ளனர். தற்போது, இந்த விடுதிகள் சமர்ப்பித்துள்ள ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வனத்துறை மற்றும் திட்டமிடல் துறையின் தடையின்மைச் சான்றிதழ்கள் உட்பட தேவையான ஆவணங்களை முறையாகச் சமர்ப்பிக்கத் தவறும் விடுதிகள் அனைத்தும் சட்டப்படி சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட், கார்னிச் இன், டால்பின்ஸ் ரிசார்ட், கே.கே. செல்பி பாயிண்ட், ஃபார்ம் ரிட்ரீட், ஃபயர் ஃபிளை ரிசார்ட், பாரத் ஹாலிடேஸ் ரிசார்ட் மற்றும் ஜிமேக்ஸ் ரிசார்ட் ஆகிய எட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள ஆய்வில், சில விடுதிகள் தற்காலிகமாக முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளதும், சில நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, டால்பின்ஸ் ரிசார்ட் போன்ற விடுதிகள் வாடிக்கையாளர்களிடம் முன்பதிவுகளை ஏற்க மறுத்து, விடுதியை மூடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட் உள்ளிட்ட சில இடங்களில் இன்னும் முன்பதிவுகள் தொடர்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஆனைக்கட்டி பகுதி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் எந்தவொரு வணிக நிறுவனமும் தப்பிக்க முடியாது என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார். அரசு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது மிகக்கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.









