ஆந்திர கடல் பகுதியில் படகு விபத்து: உரிமையாளரை துன்புறுத்த வேண்டாம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆந்திர கடற்கரை அருகே விபத்துக்குள்ளான விசைப்படகு உரிமையாளரை துன்புறுத்த வேண்டாம் என சென்னை காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விசைப்படகு விபத்து தொடர்பாக, அந்தப் படகின் உரிமையாளரை காவல்துறை துன்புறுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி வி. லக்ஷ்மிநாராயணன் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தார். படகு உரிமையாளர் செல்வழகன் என்பவர் தாக்கல் செய்த அவசர மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தற்போதைய சூழலில் காவலில் வைத்து விசாரணை நடத்துவது அவசியமில்லை என்று தனது முதற்கட்ட கருத்தைப் பதிவு செய்தது.
வழக்கின் பின்னணியில், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஒன்பது ஊழியர்களுடன் அந்தப் படகு கடலுக்குச் சென்றது. இதற்கிடையில், அர்ப் புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து படகுகளும் கரைக்குத் திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 70 படகுகளில், மனுதாரருடைய படகு உட்பட இரண்டு படகுகள் கரை திரும்பவில்லை. இது குறித்து இந்திய கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள நான்கு நபர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் அன்புமணி, விபத்தில் உயிரிழந்த பக்கிரி சூர்யாவின் மனைவி பார்வதி அளித்த புகாரின் பேரில் காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அக்டோபர் 28 ஆம் தேதியே மீன்வளத்துறை சார்பில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், படகு உரிமையாளர் மீனவர்களை மறுநாளே கடலுக்குச் செல்ல வற்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய சூழலில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், மனுதாரரை துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறைக்கு அறிவுறுத்தினார். அதன்படி, நவம்பர் 11-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி அல்லது மாலை 6 மணிக்கு காசிமேடு துறைமுக காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.









