சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு உறுதி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு பயின்று வந்த ஹரிஷ் என்ற 20 வயது மாணவர், காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருதம் மாணவர் விடுதியில் தங்கி பயின்று வந்த அந்த மாணவருக்கு, நான்கு நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக பின்னர் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார். மாணவர் உயிரிழப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அது டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட மரணம் அல்ல என்று மாநகராட்சி அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மருத்துவப் பரிசோதனைகளின் முடிவில், அவருக்கு ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, அந்த மாணவருக்கு மூளை பாதிப்பு, கடுமையான சுவாசக் கோளாறு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு (Multi-organ failure) ஆகியவை ஏற்பட்டுள்ளது மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. டெங்கு பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவரின் இந்த திடீர் மறைவு, அதே விடுதியில் தங்கியிருக்கும் பிற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வி. குமரேசன் கூறுகையில், மாணவரின் உயிரிழப்புக்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் காத்திருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு பாதிப்பு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், வளாகத்தை தூய்மையாக பராமரிப்பதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மாணவரின் மறைவு, பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.









