அண்ணாமலை பல்கலைக்கழக ஊழல் வழக்கு: முன்னாள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் விடுவிப்பு

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீதான நான்கு ஊழல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2008 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற சிவில் கட்டுமானப் பணிகள் தொடர்பான ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அப்போதைய துணைவேந்தர் எம்.ராமநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி ஆகியோர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுவை கடலூர் விசாரணை நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய அனுமதி பெறப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியது. குறிப்பாக, 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஊழல் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகே, சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, சட்டப்படி முன்அனுமதி பெறுவது கட்டாயம் என்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தினால் இந்த வழக்கிலிருந்து அவர்களை விடுவித்து உத்தரவிட்டனர்.
வழக்கின் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், பல்கலைக்கழகத்தின் கட்டுமானக் குழு மற்றும் சிண்டிகேட் குழுவின் ஒப்புதலின் பேரிலேயே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பதிவாளருக்கு ஒப்பந்தங்களை வழங்குவதில் தனிப்பட்ட அதிகாரம் ஏதும் இல்லை என்றும், இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவோ அல்லது முறைகேடாகப் பணம் மாற்றப்பட்டதாகவோ கூறுவதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த செட்டிநாடு பில்டர்ஸ் நிறுவனத்தின் மீது எந்தவிதமான சதி அல்லது முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை என அரசு தரப்பே ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் விசாரணைக்குப் பிறகு குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது முக்கியக் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.









