dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

அண்ணன் சீர் திட்டம்: பயனாளிகளுக்கான புதிய நிபந்தனைகள் மற்றும் வருமான உச்சவரம்பு அறிவிப்பு

By K. ராதாகிருஷ்ணன்
211 views
தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக அரசு தனது முக்கிய திட்டமான அண்ணன் சீர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் அரசாணை எண் 41-ன் வாயிலாக வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மணமகள், தனது திருமணத்தை 15 நாட்களுக்குள் தமிழகத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் அறிக்கையில் வருமான உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசு அந்த வரம்பை ரூ. 2.5 லட்சமாகக் குறைத்து நிர்ணயம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற பல்வேறு தகுதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக, ஐந்து ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவர். மேலும், வருமான வரி தாக்கல் செய்பவர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் இத்திட்டத்தின் பலன்களைப் பெற முடியாது. ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் குடும்ப உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் இத்திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் செய்து ஜிஎஸ்டி (GST) செலுத்தும் குடும்பங்கள் அல்லது வணிக நிறுவனங்களுக்கும் இத்திட்டத்தின் சலுகைகள் பொருந்தாது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் மணமகள் பெயரை குடும்ப ரேஷன் கார்டில் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்பதுடன், மணமகன் மற்றும் மணமகள் இருவருமே சட்டரீதியான திருமண வயதை எட்டியிருக்க வேண்டும். கல்வித் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்ட முந்தைய திருமண உதவித் திட்டங்களைப் போலன்றி, இந்த அண்ணன் சீர் திட்டத்திற்குப் பிரத்யேக கல்வித் தகுதி ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. ஏற்கனவே வேறேதேனும் அரசு திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன் பெற்றவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnesevai.tn.gov.in மூலம் மட்டுமே ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்.

திருமணம் நடைபெறுவதற்கு 60 நாட்களுக்கு முன்பிருந்தே திருமண நாள் வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அக்டோபர் 5, 2026 முதல் ஜனவரி 15, 2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு, விண்ணப்பங்களை ஜனவரி 15-ஆம் தேதி வரை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு விவரங்களைப் பதிவு செய்தவுடன், ஆன்லைன் முறை மூலம் தகுதி சரிபார்க்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் திருமண அழைப்பிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி மறுக்கப்படும் பட்சத்தில் அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படும் என்றும், அதனை எதிர்த்து இணையதளம் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டின் போது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#அண்ணன்சீர் திட்டம்
#தமிழக அரசு
#திருமண உதவித் திட்டம்
#மகளிர் உரிமை
#தமிழக செய்தி
#Annan Seer Scheme
#Tamil Nadu Government
#Marriage Assistance Scheme
#Social Welfare Department
#TN Government News
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications