தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பணி தீவிரம்: 65 புதிய காவல் நிலையங்கள் மற்றும் பிரத்யேக படை அமைப்பு

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் 65 புதிய சிறப்பு காவல் நிலையங்களை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு சிறப்பு காவல் நிலையங்களை (Anti-Narcotics Task Force) அமைப்பதற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய காவல் நிலையங்கள் அனைத்தும் நேரடியாக முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதையும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதையும் இந்த அமைப்பு உறுதி செய்யும்.
இந்த புதிய கட்டமைப்பு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது. 37 மாவட்டங்களில் தலா ஒரு காவல் நிலையமும், சென்னை, ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட ஒன்பது மாநகர காவல் ஆணையரகங்களுக்கு உட்பட்டு 28 காவல் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 12 காவல் நிலையங்கள் செயல்படும். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு ஆய்வாளர், நான்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 காவலர்கள் என மொத்தம் 65 ஆய்வாளர்கள், 260 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,300 காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இந்த சிறப்புப் படைக்குத் தலைமை தாங்க புதிதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவியாக ஒரு ஐஜி மற்றும் இரண்டு காவல் கண்காணிப்பாளர்கள் (SP) செயல்பாடுகள், புலனாய்வு மற்றும் நிர்வாகத்தை கவனிப்பார்கள். இதற்காக மொத்தம் 454 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தலைமையகத்தில் செயல்பாடுகள், இணையதளக் குற்றப்பிரிவு, புலனாய்வு, நிதி விசாரணை மற்றும் சட்ட உதவி என 10 சிறப்புப் பிரிவுகள் இயங்கும். இந்த பணிகளுக்காக மாநில அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.245.99 கோடி தொடர் செலவினங்களுக்காகவும், ரூ.18.15 கோடி இதர செலவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய காவல் நிலையங்களின் பணிகளானது போதைப்பொருள் தொடர்பான உளவுத் தகவல்களைச் சேகரித்தல், இணைய வழிக் கண்காணிப்பு, நிதி தொடர்பான விசாரணைகள், சொத்துக்களை முடக்குதல் மற்றும் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளையும் இந்த அமைப்பு ஒருங்கிணைக்க உள்ளது. இவை தவிர, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு படைக்காக 2,545 புதிய பணியிடங்களையும் அரசு அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.









