ராமாயணம் படத்தில் இணையும் பிரபல நடிகர் அனுபம் கெர்: ஜடாயு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கிறார்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் திரைப்படத்தில் ஜடாயு கதாபாத்திரத்திற்கு அனுபம் கெர் குரல் கொடுக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நீண்ட நாட்களாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பிரம்மாண்ட படைப்பான ராமாயணம் திரைப்படத்தில், மூத்த நடிகர் அனுபம் கெர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புராண இதிகாசத் திரைப்படத்தில், சீதையை ராவணன் கடத்திச் செல்லும் போது, அவரை மீட்க முயற்சிக்கும் ஜடாயு என்ற புராணப் பறவை கதாபாத்திரத்திற்கு அனுபம் கெர் தனது குரலை வழங்குகிறார். இந்த கதாபாத்திரத்தை தர்மத்தின் சிறகுகள் என்று படக்குழுவினர் வர்ணித்துள்ளனர்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம், இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள மிகப்பெரிய பிராஞ்சைஸ் ஆகும். இந்த முதல் பாகம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, வருகிற நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான முன்பதிவு வரும் அக்டோபர் 21-ம் தேதி தொடங்கப்படும் என்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் லாரா தத்தா கைகேயியாகவும், ஷீபா சட்டா மந்தாராவாகவும் நடிக்கின்றனர். மேலும் ரவி துபே, விவேக் ஓபராய், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் அருண் கோவில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். சன்னி தியோல் படத்தின் இறுதிக் காட்சியில் சிறப்புத் தோற்றத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமீத் மல்கோத்ரா தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான படைப்பாகப் பார்க்கப்படுகிறது.
படத்தின் முதல் பாகம் நவம்பர் 5, 2026 அன்று வெளியாகவுள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வெளியாகும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால தயாரிப்பு மற்றும் பிரம்மாண்டமான நடிகர் பட்டாளத்துடன் தயாராகி வரும் இந்த ராமாயணம் திரைப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் கதைக்கள ரீதியாகவும் புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.









