புதுக்கோட்டை லிங்கமலை ஆதி பூமிநாதர் கோவில்: இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ஆதி பூமிநாதர் லிங்கேஸ்வரர் கோவிலில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள லிங்கமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதி பூமிநாதர் லிங்கேஸ்வரர் கோவிலில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சேர்ந்த (ASI) அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 10-ஆம் நூற்றாண்டில் அழகிய மணவாள தேவன் என்பவரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயம், வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்குகிறது. கோவிலின் தற்போதைய சிதிலமடைந்த நிலை மற்றும் அங்குள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு லிங்கமலை மீட்புக் குழுவினர் மத்திய அரசுக்கும், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த ஆய்வின் போது, கோவிலின் பல்வேறு பகுதிகளில் சிதிலமடைந்து சாய்ந்த நிலையில் கிடக்கும் தூண்களில் உள்ள கல்வெட்டுகளை அதிகாரிகள் தீவிரமாகப் பரிசோதித்தனர். மேலும், வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்கும் நோக்கில், அங்குள்ள கல்வெட்டுகளின் பிரதிகளை ஆவணப்படுத்திக் கொண்டனர். சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகள் மற்றும் கல்வெட்டுகளின் பிரதிகள் சென்னை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள நிபுணர்களால் முழுமையான ஆய்வு செய்யப்படவுள்ளது. அதன் பின்னர், இது குறித்த விரிவான அறிக்கையை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைமையகத்திற்கும் மத்திய அரசுக்கும் தாக்கல் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் கோவில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிற்பக்கலை நுணுக்கங்களையும், தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தது அப்பகுதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திருக்கோவிலை உரிய முறையில் சீரமைத்து, அதன் பழமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லிங்கமலை மீட்புக் குழுவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கல்வெட்டுகளின் ஆய்வுக்குப் பிறகு, கோவில் மறுசீரமைப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, லிங்கமலை பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, இப்பகுதி சமூக நல்லிணக்க ரீதியிலும் சட்ட ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றது. அண்மையில் கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று, லிங்கமலையில் கிரிவலம் செல்ல மதுரை உயர் நீதிமன்றக் கிளை அனுமதி அளித்திருந்தது. இதற்கிடையே, மலை உச்சியில் உள்ள சிலுவையில் தீபம் ஏற்றப்பட மாட்டாது என்று இந்து தரப்பு அளித்த உறுதியின் அடிப்படையில் கிரிவலம் நடைபெற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், இப்பகுதியின் ஆன்மீக சூழலையும் கருத்தில் கொண்டு தொல்பொருள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.









