தமிழக அறநிலையத்துறை கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக அர்ச்சனா கல்பாத்தி நியமனம்

ஏஜிஎஸ் சினிமாஸ் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் குழுவை மீண்டும் அமைத்து அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, ஆண்டு வருமானம் பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஈட்டும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் பொறுப்பானது, மறுசீரமைக்கப்பட்ட இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக திரைப்படத் தயாரிப்பாளரும், ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழுவானது இரண்டு ஆண்டு காலப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. புதிய குழுவிற்கான பணிகள் கடந்த ஜூலை 24, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான தலைவராக மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். துணைத் தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி முனைவர் கே. ராமநாதன் செயல்படுவார். அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.ஆர். சம்பத், சுமதி ஸ்ரீ மற்றும் முனைவர் டி. வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற பிறகு, திரைப்படத் துறையைச் சேர்ந்த பல நபர்களுக்கு அரசின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா, டெல்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மேலும், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பணிக் காலத்தில் 'நண்பன்', 'பீஸ்ட்' மற்றும் 'லியோ' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இந்த நியமனங்கள் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துக்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, முதலமைச்சரின் அரசியல் பிரிவு அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்ட ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் மீதான எதிர்ப்புகள் காரணமாக, அந்த நியமனம் திரும்பப் பெறப்பட்டது. பின்னர், முதலமைச்சர் விஜய்யின் நீண்டகால மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமி, முதலமைச்சரின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அறநிலையத்துறையின் கோயில் அறங்காவலர் குழுவில் அர்ச்சனா கல்பாத்தியின் சேர்க்கை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.









