அக்டோபர் 2-க்கு தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் அன்பில் அவன்: என்ன காரணம் தெரியுமா?

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் அன்பில் அவன் திரைப்படத்தின் வெளியீடு அக்டோபர் 2-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'அன்பில் அவன்'. இப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த வெளியீட்டுத் தேதி ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டு, அக்டோபர் 2-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணத்தை படக்குழுவினர் விளக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் விநியோகஸ்தர்களிடையே எழுந்துள்ள நேர்மறையான கருத்துக்களே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும், படத்தை இன்னும் பிரம்மாண்டமாகவும், கூடுதல் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகப்படியான ரசிகர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் படத்தை கொண்டு சேர்ப்பதே இந்த காலதாமதத்தின் முக்கிய நோக்கம் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. ரசிகர்களின் ஆதரவிற்குத் தாங்கள் நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் அறிமுகமாகும் இப்படைப்பிற்கு, திரைக்கதையை அவரே விக்னேஷ் ராஜா மற்றும் அசோக் செல்வனுடன் இணைந்து எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை பணிகளை ஆஷமீரா ஐயப்பன் கவனித்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவை கௌதம் ராஜேந்திரன் மேற்கொண்டுள்ளார். படத்தின் சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்துள்ளார், படத்தொகுப்பு பணிகளை செல்வா ஆர்.கே. கவனித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக வலுவான கூட்டணியுடன் இப்படம் உருவாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அசோக் செல்வனுக்கு 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' திரைப்படத்திற்குப் பிறகு சுமார் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் இப்படம் வெளியாகிறது. அவர் இறுதியாக உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பிரீத்தி முகுந்தனுக்கு இந்த ஆண்டு 'பிளாஸ்ட்' மற்றும் 'இதயம் முரளி' ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளியாகும் 'அன்பில் அவன்' படம் எந்த அளவிற்கு வெற்றியைப் பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.









