ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: வறுமையையும் தடைகளையும் வென்று தங்கம் வென்ற ஜம்மு காஷ்மீர் சிறுவன்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது முகம்மது யாசர், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியைச் சேர்ந்த 14 வயது இளம் வீரர் முகம்மது யாசர், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். தஜிகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஈரான் நாட்டு வீரர்களைத் தோற்கடித்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து இந்தப் போட்டியில் தங்கம் வெல்லும் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மிகச் சிறிய வயதிலேயே வறுமை, தந்தை இழந்த துயரம் மற்றும் வீடிழப்பு போன்ற கடுமையான சவால்களை எதிர்கொண்ட போதிலும், தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியைக் கடைப்பிடித்து இந்த வெற்றியை அவர் சாத்தியமாக்கியுள்ளார்.
முகம்மது யாசரின் இளமைப்பருவம் மிகவும் கடினமான சூழலில் கழிந்தது. 2018 ஆம் ஆண்டு இவரது குடும்பத்தின் வீடு அகற்றப்பட்ட நிலையில், சில மாதங்களிலேயே இவரது தந்தை மாரடைப்பால் காலமானார். இதனால் ஏற்பட்ட கோபத்தையும் விரக்தியையும், அவரது பயிற்சியாளர் முகம்மது இஷ்தியாக் நேர்மறையான திசையில் திருப்பினார். ஜம்மு காஷ்மீர் விளையாட்டு கவுன்சில் மைதானத்தில் மற்ற சிறுவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த யாசரின் திறமையைக் கண்டறிந்த இஷ்தியாக், அவருக்கு முறையான குத்துச்சண்டை பயிற்சியை வழங்கினார். போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகும் அபாயம் இருந்த சூழலில், தன் மகனை அந்தப் பாதையிலிருந்து காப்பாற்ற குத்துச்சண்டை ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று யாசரின் தாய் நசீம் அக்தர் கருதினார்.
குத்துச்சண்டை பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் சத்தான உணவுக்கான செலவுகளைச் சமாளிக்க யாசர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் போராட்டத்தைச் சந்தித்தனர். இக்கட்டான நேரங்களில் பயிற்சியாளர் இஷ்தியாக் மற்றும் அவரது நண்பர் ஆசிஃப் லோன் ஆகியோர் யாசரின் பயிற்சிக்கான செலவுகளில் உதவிக்கரம் நீட்டினர். பள்ளிப் படிப்பைத் தாண்டி, எம்பிபிஎஸ் மாணவர்களுக்காகச் சமையல் வேலை செய்யும் பகுதிநேர வேலையிலும் யாசர் ஈடுபட்டு வருகிறார். மாதத்திற்கு 2,500 ரூபாய் ஊதியம் ஈட்டி, அதைத் தனது பயிற்சிக்காகச் செலவிடும் அவரது அர்ப்பணிப்பு பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
தாஷ்கண்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்கும்போது, தன் குடும்பத்தின் ஏழ்மை நிலையையும் இதுவரை கடந்த வந்த தடைகளையும் நினைவுகூர்ந்ததாக யாசர் கூறுகிறார். இந்தப் பதக்க வெற்றி, அவரது எதிர்காலக் கனவுகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. தற்பொழுது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதையே இலக்காகக் கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளராக உருவாக வேண்டும் என்ற லட்சியத்துடன், கடினமான சூழல்களையும் மீறி முன்னேறும் யாசர், இன்று பல இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.









