ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: வீரர்களுக்காக பிரம்மாண்டமாக தயாராகும் மிதக்கும் விளையாட்டு கிராமம்

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கோஸ்டா செரீனா சொகுசு கப்பல் மிதக்கும் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஐச்சி-நகாயா நகரில் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக, உலகின் முன்னணி சொகுசு கப்பல்களில் ஒன்றான 'கோஸ்டா செரீனா' (Costa Serena) மிதக்கும் விளையாட்டு கிராமமாக மாற்றப்பட்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்குவதற்கு வசதியாக, இந்த பிரம்மாண்ட கப்பலை பயன்படுத்த ஆசிய விளையாட்டு விழா அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இத்தாலியின் புகழ்பெற்ற கப்பல் கட்டும் நிறுவனமான ஃபின்கான்டியரி மூலம் 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கப்பல், கடந்த 2025-ஆம் ஆண்டு சீனாவில் நவீனமயமாக்கல் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டது. சுமார் 14 தளங்களைக் கொண்டுள்ள இந்த கப்பலில், 557 பால்கனி அறைகள், எட்டு உணவகங்கள் மற்றும் 10 மதுபான விடுதிகள் உள்ளிட்ட சொகுசு வசதிகள் உள்ளன.
இந்த கப்பலை விளையாட்டு கிராமமாக பயன்படுத்துவதற்குப் பின்னால் ஒரு முக்கியமான பொருளாதார நோக்கம் உள்ளது. போட்டிகள் முடிந்த பிறகு பயன்படுத்தப்படாமல் வீணாகிவிடும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் செலவுகளைக் குறைக்க அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டு இந்த கப்பல் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15-ஆம் தேதி நகாயா துறைமுகத்திற்கு வந்து சேரும் இந்த கப்பல், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளின் போது தங்கும் விடுதியாகச் செயல்படும்.
அனைத்து வீரர்களும் இந்த கப்பலில் தங்க வைக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 5,000 விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரதிநிதிகள் மட்டுமே ஒரே நேரத்தில் இங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக, ஜூடோ, மல்யுத்தம் மற்றும் வில்வித்தை போன்ற நகாயா துறைமுகத்திற்கு அருகில் போட்டிகள் நடைபெறும் பிரிவுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை சுமார் 17,000 என மதிப்பிடப்பட்டுள்ளதால், எஞ்சிய வீரர்கள் தங்குவதற்கு கப்பல் கொள்கலன் போன்ற தற்காலிக கூடாரங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டோக்கியோவில் நடைபெறும் நீச்சல் மற்றும் குதிரையேற்றப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் அந்த நகரின் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலப்பகுதியில் ஜப்பானில் சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த சவாலை எதிர்கொள்ளவும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமைப்பாளர்கள் முழுமையாகத் தயாராக உள்ளனர். இது குறித்துப் பேசிய பொறுப்பாளர்கள், வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் ஒரு வாரத்திற்கு முன்பே கிடைத்துவிடும் என்றும், ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளனர். விளையாட்டு உலக வரலாற்றில் இத்தகைய மிதக்கும் தங்கும் விடுதி முயற்சி, பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.









