ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்தியா சார்பில் 492 வீரர்கள் பங்கேற்பு - கூடுதல் வீரர்கள் சேர்க்கப்பட வாய்ப்பு

ஜப்பானின் நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 492 இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
ஜப்பானின் நகோயா நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் இறுதி செய்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு, அதில் ஆசிய தரவரிசை மற்றும் அவர்களின் முந்தைய செயல்பாடுகளை கருத்தில் கொண்டு தற்போது 492 வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 265 ஆண்கள் மற்றும் 227 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை இறுதி அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கூடுதலாக 25 முதல் 30 வீரர்கள் வரை அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஊக்கமருந்து விவகாரங்கள் காரணமாக மல்யுத்தம் மற்றும் பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பளுதூக்குதலில் 10 வீரர்களுக்குப் பதிலாக தற்போது 5 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மல்யுத்தத்திலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சில பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தடகளப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா தலைமையிலான 73 பேர் கொண்ட வலுவான அணி களமிறங்குகிறது. இந்த விளையாட்டே இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷூட்டிங் விளையாட்டில் 15 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் என மொத்தம் 30 வீரர்களும், வில்வித்தையில் தீரஜ் பொம்மதேவரா தலைமையிலான 12 பேர் கொண்ட அணியும் தேர்வாகியுள்ளனர். ஸ்குவாஷ் போட்டியில் 8 வீரர்களும், ஃபென்சிங் போட்டியில் 20 வீரர்களும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர். குத்துச்சண்டை அணியில் 11 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நீதிமன்ற வழக்குகளால் சர்பிங் விளையாட்டிற்கான வீரர்கள் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த வழக்கு முடிவுக்கு வந்த பிறகு குறைந்தது இருவர் அணியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூடோ விளையாட்டில் புதிய கூட்டமைப்பு இரு பெயர்களைக் கோரியிருந்தாலும், ஆசிய அளவில் முதல் ஆறு இடங்களுக்குள் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கேற்ப பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி தகுதியின் அடிப்படையில் திறமையான வீரர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.









