ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஜப்பானில் இந்திய தடகள அணியினருக்கான சிறப்புப் பயிற்சி முகாம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்திய தடகள அணியினர் ஜப்பானில் சிறப்புப் பயிற்சி முகாமில் ஈடுபட உள்ளனர்.
வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்திய தடகள அணியினர் ஜப்பானில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் சிறப்புப் பயிற்சி முகாமில் ஈடுபட உள்ளதாக தடகள கூட்டமைப்பு (AFI) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஜப்பானின் ஐச்சி-நகாயா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக இந்திய வீரர்கள் ஜப்பானின் டோக்கியோவிற்கு அருகிலுள்ள சுகுபா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற உள்ளனர். இந்த பல்கலைக்கழகம் போட்டிகள் நடைபெறும் நகாயா நகரிலிருந்து சுமார் 420 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) மற்றும் ஜப்பானின் சுகுபா பல்கலைக்கழகத்திற்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு விஞ்ஞானிகள் ஜப்பானில் சிறப்புப் பயிற்சிகள் மற்றும் அனுபவப் பரிமாற்றத் திட்டங்களில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய தடகள அணியானது செப்டம்பர் 10-ஆம் தேதி புது தில்லியில் நடைபெறவுள்ள இந்திய தடகள இறுதித் தொடரில் பங்கேற்ற பிறகு, செப்டம்பர் 12 அல்லது 13-ஆம் தேதிகளில் ஜப்பான் பயணம் மேற்கொள்ள உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் சுமார் 72-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 2023-ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். கடந்த ஜூன் 28-ஆம் தேதி புவனேஷ்வரில் நடைபெற்ற தேசிய மாநிலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நிறைவடைந்த உடனே, இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் (IOA) அணியின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதாக கூட்டமைப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், செக் குடியரசில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய வீரர்கள் தாயகம் திரும்புகின்றனர். அவர்கள் புவனேஷ்வரில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய ஓபன் உலக தடகள தொடரிலும் பங்கேற்க உள்ளனர். இந்தத் தொடரில் முரளி ஸ்ரீசங்கர், அன்சி சோஜன், ஜோதி யாராஜி மற்றும் கிஷோர் ஜேனா போன்ற நட்சத்திர வீரர்கள் களமிறங்க உள்ளனர். ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆகஸ்ட் 21-ஆம் தேதி லாசேன் டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளதால், அவர் புவனேஷ்வர் போட்டியில் பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை.









