ஆத்தூர்-ராசிபுரம் மேம்பாலப் பணி தாமதம்: பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

ஆத்தூர்-ராசிபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆத்தூர்-ராசிபுரம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப் பணிகள் முழுமையடையாமல் நீடித்து வருவதால், தினசரி போக்குவரத்து நெரிசலும், பயண நேர தாமதமும் பொதுமக்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் அலுவலக நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் மக்கள் அன்றாடப் பயணங்களுக்குப் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதியான ரயில்வே தண்டவாளத்திற்கு மேலே அமைய வேண்டிய மத்திய பகுதி இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும் வாகன ஓட்டிகள், வழக்கமான தூரத்தை விட கூடுதலாக 15 முதல் 20 கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது போக்குவரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தற்காலிக சுரங்கப்பாதை மிகவும் குறுகலாக இருப்பதால், கார்கள் கூட ஒன்றையொன்று கடக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றன. கனரக வாகனங்கள் நுழைய முடியாத அளவிற்கு சிறியதாக இருப்பதால், வாரத்திற்கு ஒருமுறை என்ற வீதத்தில் வாகனங்கள் சிக்கிப் போக்குவரத்து முடங்கும் நிலை தொடர்கிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அவசர மருத்துவ சிகிச்சைக்கோ அல்லது விபத்து நேரங்களிலோ இந்த குறுகிய சுரங்கப்பாதை பெரும் தடையாக இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். மாநில நெடுஞ்சாலைத் துறையின் சிறப்புப் பிரிவான தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இப்பணிகள், உரிய திட்டமிடல் இன்றி நடைபெறுவதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பலமுறை புகார் அளித்தும் பணிகள் மந்தமாகவே நடப்பதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த சிக்கல் குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ரயில்வே தண்டவாளத்திற்கு மேலே அமைய வேண்டிய 60 மீட்டர் நீளமுள்ள 'போஸ்ட்ரிங் கார்டர்' (bowstring girder) பொருத்துவதற்கான ஒப்புதல் சமீபத்தில்தான் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர். மொத்தம் உள்ள 23 மேம்பாலப் பகுதிகளில் 18 பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கார்டர் பொருத்தும் பணி இன்னும் ஒரு மாதத்திற்குள் தொடங்கும் என்றும், அதன் பிறகு பாலத்தின் இருபுறமும் இறுதி வேலைகளை முடித்து 2027-ஆம் ஆண்டு பாதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.









