விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமியை கடத்த முயற்சி: இருவர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 9-ஆம் தேதி மாலை 7 மணியளவில், சிறுமி தனது தாய் கூறியபடி அருகில் உள்ள கடைக்கு வெங்காயம் வாங்கச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமி தனியாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த இருவர் அவரை மறித்து ஆசை வார்த்தைகள் கூறி வாகனத்தில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளனர். இருப்பினும், அந்த சிறுமி மறுப்பு தெரிவித்ததோடு, அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை விவரித்த நிலையில், அவர்கள் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மதிவாணன் உத்தரவின் பேரில், செஞ்சி துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.ரமேஷ் ராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
விசாரணையின் முடிவில், செஞ்சி தாலுகாவைச் சேர்ந்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவா (27) மற்றும் வடதரம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (27) ஆகிய இருவர் இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த இருவரும், மது போதையில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்தோடு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்த போலீசார் செஞ்சிக்கு அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, ஐயப்பன் அங்கிருந்து தப்பியோட முயன்றதில் கீழே விழுந்து அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டது. மேலும், கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன ஏழாவது வகுப்பு மாணவி ஹேமலதா வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அந்த வழக்கில் தங்களுக்கு தொடர்பில்லை என இருவரும் மறுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.









