dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு நிதி முறைகேடு: இயக்குநர் பணியிடை நீக்கம்

By Admin
26/09/2026
63 views
பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு நிதி முறைகேடு: இயக்குநர் பணியிடை நீக்கம்

கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை நிதியை முறைகேடு செய்ததாக, அப்பிரிவின் இயக்குநர் ஆர்.அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் துறை இயக்குநராக (பொறுப்பு) பணியாற்றி வந்த பேராசிரியர் ஆர்.அண்ணாதுரை, விளையாட்டு நிதி முறைகேடு புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் குழுவின் ஒருங்கிணைப்பாளரான தீரஜ் குமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீட்டு விதிகள் 17பி-ன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு தனியார் கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநர்கள் கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்தனர். அந்த புகாரில், பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான விளையாட்டு நிதியை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு விடுவிக்க பேராசிரியர் அண்ணாதுரை மறுப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் சார்பில் தலா 100 ரூபாய் விளையாட்டு கட்டணமாக செலுத்தப்பட்ட நிலையிலும், இந்த நிதியை முறையாகப் பயன்படுத்தாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாணவர்கள் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்னிந்திய மற்றும் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்கும்போது, அவர்களுக்கான பயணப்படி, தினசரி செலவுகள், பயிற்சி முகாம்கள், விளையாட்டு உடைகள் மற்றும் தங்கும் வசதிகளுக்கான நிதியை பல்கலைக்கழகம் வழங்கவில்லை என கல்லூரிகள் வேதனை தெரிவித்தன. இதனால், மாணவர்களின் நலன் கருதி கல்லூரிகள் தங்கள் சொந்த செலவிலேயே இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

இப்புகார் குறித்து விசாரணை நடத்த இரண்டு சிண்டிகேட் உறுப்பினர்கள் அடங்கிய குழுவை உயர்கல்வித் துறை அமைத்திருந்தது. இந்தக் குழு நடத்திய முதற்கட்ட விசாரணையில், விளையாட்டு நிதியில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பேராசிரியர் ஆர்.அண்ணாதுரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த நிதி நிர்வாகம் குறித்து விரிவான விசாரணை நடத்த உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#பாரதியார் பல்கலைக்கழகம்
#நிதிமுறைகேடு
#கோவைசெய்திகள்
#உயர்கல்வித்துறை
#தமிழகம்
#BharathiarUniversity
#CoimbatoreNews
#FinancialFraud
#HigherEducation
#TamilNadu
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications