தருமபுரி அருகே ரயிலின் மீது உருண்டு விழுந்த பாறை: பயணிக்கு காயம், ரயில் சேவை பாதிப்பு

தருமபுரி அருகே முத்தம்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் சரிந்த பாறை ரயில் மீது மோதியதில் பயணி ஒருவர் காயமடைந்தார்.
நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 17236), தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாறை ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், ரயில் சேவை சுமார் 30 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை 5.30 மணி அளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கமளிக்கையில், முத்தம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்ததாகத் தெரிவித்தனர். மழையின் காரணமாக அந்தப் பகுதியில் இருந்த மேல்பகுதி மண் அரிப்பு ஏற்பட்டு, மலையின் சரிவில் இருந்த பெரிய பாறை ஒன்று தண்டவாளத்தில் சென்ற ரயில் மீது மோதியுள்ளது. இந்த மோதலை உணர்ந்த ரயில் ஓட்டுநர் (லோகோ பைலட்), உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு, பாதிப்புகளை ஆய்வு செய்தார். ரயிலின் அமைப்பில் பெரிய பாதிப்புகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, ரயில் தருமபுரி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தருமபுரி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும், ரயில்வே பொறியாளர்கள் குழுவினர் அந்த ரயிலை முழுமையாக ஆய்வு செய்தனர். பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே ரயில் அங்கிருந்து பெங்களூரு நோக்கிப் புறப்பட்டது. இந்த எதிர்பாராத விபத்தினால் ரயில் பயணத்தில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. இந்த மலைப்பாதையில் ரயில் தண்டவாளங்கள் இரு மலைகளுக்கு இடையே அமைந்துள்ளதால், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, மலைச்சரிவுகளில் பாறைகள் உருண்டு விழுவதைத் தடுக்க உயர் ரக எஃகு வலைகளைப் பயன்படுத்தி தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தடுப்புப் பணிகள் முழுமையடைவதற்கு முன்பே இந்த விபத்து நேரிட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.









