திருப்பத்தூரில் பரிதாபம்: யூடியூப் பார்த்து அறிவியல் பரிசோதனை செய்த சிறுவன் தீ விபத்தில் உயிரிழப்பு

திருப்பத்தூரில் யூடியூப் வீடியோவைப் பார்த்து அறிவியல் பரிசோதனை செய்த 11 வயது சிறுவன் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சோலையூர் பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுவன் கவின், அறிவியல் மீதான ஆர்வத்தினால் செய்த பரிசோதனை ஒன்று பெரும் துயரத்தில் முடிந்துள்ளது. ஆறாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கவின், இணையதளங்களில் மற்றும் யூடியூப் தளங்களில் அறிவியல் பரிசோதனைகள் தொடர்பான வீடியோக்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது தனது வீட்டில் எளிய அறிவியல் சோதனைகளைச் செய்து வந்த சிறுவன், எதிர்பாராத விதமாக தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த சனிக்கிழமை அன்று, சிறுவன் கவின் தனது வீட்டு மொட்டை மாடியில் அறிவியல் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தான். அப்போது வீட்டில் இருந்த பெயிண்ட் தின்னரை (paint thinner) எடுத்து, அதனுடன் மண்ணெண்ணெயைக் கலந்து பரிசோதனை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் ஆவியாகக்கூடிய தன்மை கொண்ட இந்த ரசாயனக் கலவையைச் சோதிக்கும்போது, எதிர்பாராத விதமாக சிறுவனின் ஆடையில் தீப்பற்றியுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதைக் கண்ட சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அவனது பெற்றோர் பதறியடித்துக்கொண்டு மாடிக்கு ஓடி வந்தனர்.
மகனைக் காப்பாற்ற முயன்ற அவனது தந்தை இளையராசு, சிறுவன் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இந்த முயற்சியின்போது அவருக்கும் சுமார் 12 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சிறுவன் மற்றும் அவனது தந்தை மீட்கப்பட்டு, முதலில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கவின், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த துயரச் சம்பவம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெயிண்ட் மற்றும் தின்னர்கள் போன்ற ரசாயனப் பொருட்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய மூலப்பொருட்களைக் கொண்டவை என்பதால், அவற்றை வெப்பம் அல்லது தீயின் அருகில் கொண்டு செல்வது பெரும் ஆபத்தானது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுபோன்ற பரிசோதனைகளை உரிய மேற்பார்வையின்றி குழந்தைகள் செய்வது ஆபத்தானது என்பதை உணர்ந்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுவனின் இந்த மரணம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.









