dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

By Admin
17/08/2026
71 views
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு செயல்படுத்தி வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை (SOP) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 15,454 பள்ளிகளில் பயிலும் சுமார் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தரமான உணவை மாணவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் உணவை தயாரித்து பரிமாறும் பணியை மகளிர் சுய உதவிக்குழுவினர் மேற்கொள்ள உள்ளனர். இதில் சேரும் உறுப்பினர்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், அவர்கள் அதே கிராமம் அல்லது பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களாகவும், அடிப்படை சமையல் அறிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்களது குழந்தைகள் அதே பள்ளியில் பயில்வது கூடுதல் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், ஆனால் மலைப்பாங்கான மற்றும் பழங்குடியின பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 8-ஆம் வகுப்பு வரை கல்வித் தகுதி தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், வங்கிக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்திய முன்மாதிரி உறுப்பினர்கள் மட்டுமே இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

திட்டம் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குச் சமையல் கலை மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும். காலை 6 மணிக்குத் தொடங்கி 8 மணிக்குள் சமையல் பணியை முடித்து, காலை 8 மணி முதல் 9 மணிக்குள் மாணவர்களுக்குச் சூடான உணவைப் பரிமாற வேண்டும். உணவைப் பரிமாறிய பிறகு, 9.30 மணிக்குள் பாத்திரங்களைச் சுத்தம் செய்து பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது கால அட்டவணையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் உப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்றும், காய்கறிகளை உள்ளூர் சந்தைகள் அல்லது பள்ளித் தோட்டங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்குத் தனி சமையலறை தேவையில்லை; அவர்கள் அருகிலுள்ள மையங்களுடன் இணைக்கப்படுவார்கள். அங்கிருந்து உணவை விநியோகம் செய்யும் உறுப்பினர்களுக்கு 1,500 ரூபாய் விநியோகக் கட்டணமாக வழங்கப்படும். திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தினசரி பதிவேடுகள் பராமரிப்பு, மொபைல் செயலி மூலம் புகைப்படம் மற்றும் தரவுகளைப் பதிவேற்றுதல், அவ்வப்போது ஆய்வுகள், உணவு மாதிரிகளைப் பாதுகாத்தல் மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கை போன்ற கடுமையான கண்காணிப்பு முறைகள் பின்பற்றப்படும்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#காலைஉணவுத்திட்டம்
#தமிழகஅரசு
#கல்வித்துறை
#மகளிர்மேம்பாடு
#தமிழ்நாடுசெய்தி
#BreakfastScheme
#TamilNaduGovernment
#SchoolNutrition
#EducationNews
#TNGov
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications