அடுக்குமாடி குடியிருப்பு குறைபாடுகள்: 5 ஆண்டு பொறுப்பு கட்டுநருக்கே என தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு

வீட்டு உரிமையாளர்கள் சங்கம் உருவானாலும், அடுக்குமாடி குடியிருப்பின் குறைபாடுகளை 5 ஆண்டுகளுக்குள் சரிசெய்ய வேண்டியது கட்டுநரின் பொறுப்பு என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ஜெம் குரோவ் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TNREAT) முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கான நலச் சங்கம் உருவாக்கப்பட்டாலும், வீடுகளை ஒப்படைத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கண்டறியப்படும் கட்டுமானக் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டிய சட்டபூர்வமான பொறுப்பு கட்டுநரையே சாரும் என்று தீர்ப்பாயம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் (முறைப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) சட்டம், 2016-ன் பிரிவு 14(3)-ன் கீழ், இந்த காலக்கெடுவிற்குள் தெரிவிக்கப்படும் குறைகளை நிவர்த்தி செய்வது கட்டுநரின் கடமை என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பெரும்பாக்கம் ஜெம் குரோவ் குடியிருப்போர் நலச் சங்கத்தால் தொடரப்பட்டது. அங்குள்ள ஆறு பிளாக்குகளில் 540-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தாங்கள் வசிக்கும் கட்டடத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்றும், தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையடையவில்லை என்றும், சுவர்களில் நீர் கசிவு மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் அந்தச் சங்கம் புகார் அளித்திருந்தது. இந்த குறைபாடுகள் குறித்து 2021-ம் ஆண்டு நவம்பர் மாதமே கட்டுமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. சங்கத்தின் இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ஐந்து ஆண்டு சட்டப்பூர்வ காலத்திற்குள்ளேயே குறைகள் சுட்டிக்காட்டப்பட்டதை ஏற்றுக்கொண்டது.
குரோவ் ஓஎம்ஆர் பிராப்பர்டீஸ் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தீர்ப்பாயம், சங்கத்தின் வாதங்களை ஏற்றுக்கொண்டது. குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் உருவானால், கட்டுநரின் பொறுப்பு முடிந்துவிடும் என்ற நிறுவனத்தின் வாதத்தை தீர்ப்பாயம் நிராகரித்தது. அதேவேளையில், குடியிருப்பில் உள்ள கிளப் ஹவுஸ் தொடர்பான கோரிக்கையில் மட்டும் தீர்ப்பாயம் மாறுபட்ட கருத்தைக் கூறியுள்ளது. கிளப் ஹவுஸ் தொடர்பான ஒப்பந்தங்களின்படி, அது ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது மற்றும் அவர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது என்பதால், அந்த விவகாரத்தில் கட்டுநருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியுள்ளது.
கிளப் ஹவுஸ் தவிர்த்து, மற்ற பொதுவான வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) பிற உத்தரவுகளை தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியது. மேலும், விற்கப்படாத குடியிருப்புகளுக்கும் சேர்த்து, விற்பனை ஆகும் வரை சதுர அடிக்கு மாதம் 1.5 ரூபாய் வீதம் பராமரிப்பு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வாங்குபவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தீர்ப்பு, கட்டுமான நிறுவனங்களுக்குப் பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.









