dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

புற்றுநோயை வென்ற உறுமி.. 58 வயதில் விளையாட்டு மைதானத்தில் சாதனை படைக்கத் துடிக்கும் ஷீலா ஸ்ரீதரன்

By K. ராதாகிருஷ்ணன்
221 views
புற்றுநோயை வென்று 58 வயதில் சுத்தியல் எறிதல் போட்டியில் பதக்கம் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ள வீராங்கனை ஷீலா ஸ்ரீதரன்.

புற்றுநோயை வென்று 58 வயதில் சுத்தியல் எறிதல் போட்டியில் பதக்கம் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ள வீராங்கனை ஷீலா ஸ்ரீதரன்.

ஐம்பத்தெட்டு வயதிலும் தளராத மன உறுதியுடன் விளையாட்டு மைதானத்தில் தினமும் பயிற்சி மேற்கொண்டு வருபவர் ஷீலா ஸ்ரீதரன். சுத்தியல் எறிதல் (Hammer Throw) விளையாட்டில் சிறந்து விளங்கும் இவர், தனது வயது முதிர்வையும், கடந்து வந்த கடினமான சூழல்களையும் பொருட்படுத்தாமல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பயிற்சிகளை ஒரு வழக்கமான செயலாகப் பார்க்காமல், தனக்கு நேர்ந்த துயரங்களுக்கு எதிரான ஒரு போராட்டமாகவே அவர் கருதுகிறார். கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு, மூத்த பயிற்சியாளர் ஆர்.எம். நாராயணனின் வழிகாட்டுதலில் தனது திறமையை அவர் மெருகேற்றி வருகிறார்.

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஷீலா, தனது பள்ளிப் பருவத்திலிருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். குண்டு எறிதல், வட்டு எறிதல், வில்வித்தை மற்றும் கைப்பந்து எனப் பல துறைகளில் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த விளையாட்டுத் திறமையே அவருக்கு அரசு வேலை கிடைக்கவும் காரணமாக அமைந்தது. ஆனால், 2013-ம் ஆண்டு அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கருப்பை மற்றும் சினைப்பை புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு, மூன்று முறை கடுமையான சிகிச்சைகளை எதிர்கொண்டார். இக்காலகட்டத்தில் உடல்நலக் கோளாறுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என பல சவால்களை அவர் சந்தித்தார்.

மிகக் கடினமான சூழல்களிலும் தனது லட்சியத்தைக் கைவிடாத ஷீலா, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் தனது பெற்றோர் மற்றும் சகோதரரை இழந்த துயரத்திலிருந்து மீள மீண்டும் மைதானத்தையே நாடினார். நீண்ட கால கதிர்வீச்சு சிகிச்சைகளால் உடல் பலவீனமடைந்திருந்த போதிலும், தனது இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கினார். தற்போதைய பயிற்சியாளர் ஆர்.எம். நாராயணனின் அனுபவமிக்க பயிற்சிகள் அவருக்குப் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளன. இதற்காகவே அவர் சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு பணியிட மாற்றம் பெற்று வந்துள்ளார். தற்போது 2027-ம் ஆண்டு ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதுடன், உலக சாதனை படைக்கவும் அவர் உறுதியுடன் உள்ளார்.

தனது போராட்டப் பயணம் குறித்துப் பேசும் ஷீலா, மருத்துவர்களின் நம்பிக்கை மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் ஆதரவு தனக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாகக் குறிப்பிடுகிறார். அதேசமயம், முன்னாள் வீரர்களுக்கான அரசின் உதவித் திட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், அரசு ஊழியர்களாக இருக்கும் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி பெறவும், போட்டிகளில் பங்கேற்கவும் உரிய அனுமதி மற்றும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தடைகள் எத்தனை வந்தாலும் அவற்றை முறியடித்து மீண்டும் புதிய தொடக்கத்தைத் தேடும் ஷீலாவின் பயணம், பலருக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#ஷீலாஸ்ரீதரன்
#சுத்தியல்எறிதல்
#புற்றுநோயைவென்றவர்
#உறுதி
#விளையாட்டுச்செய்திகள்
#SheelaSreedharan
#HammerThrow
#CancerSurvivor
#SportsInspiration
#CoimbatoreAthletics
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications