இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களை உருவாக்கத் திட்டம்: மத்திய அரசு அதிரடி முடிவு

இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த மாநிலங்களுக்கு தலா 500 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை கூடுதல் செயலாளர் சுமன் பில்லா தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற டி.என்.ஐ.இ சுற்றுலா உச்சிமாநாடு 2026 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், பொது இயக்குநருமான சுமன் பில்லா, இந்திய சுற்றுலாத்துறையின் எதிர்கால வளர்ச்சி குறித்த முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். நாட்டின் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், வெளிநாட்டு சுற்றுலாத் தலங்களுக்கு இணையான வசதிகளை இந்தியாவிற்குள்ளேயே உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் வலியுறுத்தினார். கேரளாவின் குமரகம், குஜராத்தின் ஏக்தா நகர் மற்றும் காசி விஸ்வநாதர் வழித்தடம் போன்ற இடங்கள் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையங்களாக மாற்றப்பட்டிருப்பதை அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கமளித்த சுமன் பில்லா, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுற்றுலாத்துறையின் பங்களிப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் மூலம் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் சுற்றுலாத்துறையில் கூடுதலாக 2.5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்துறை 8.9 கோடி பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், 'ஒவ்வொரு மாநிலமும் ஒரு உலகளாவிய சுற்றுலாத் தலத்தை உருவாக்குதல்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகள் தங்களின் பகுதியில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால், மத்திய அரசு சார்பில் தலா 500 கோடி ரூபாய் வரையிலான நிதி மானியமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இருப்பினும், இந்த நிதியுதவி மாநிலங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தினார்.
இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிற துறைசார் நிபுணர்கள், சுற்றுலா மேம்பாட்டில் கலை மற்றும் கலாச்சாரத்தின் பங்கு குறித்து விவாதித்தனர். இசையமைப்பாளர் சரஸ் மேனன், வயலின் கலைஞர் ஸ்ரவன் ஸ்ரீதர் மற்றும் ராப் கலைஞர் ஃபால்ட் கை ஆகியோர் நேரலை நிகழ்ச்சிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டினர். அதேபோல், லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் ஆஷிஷ் குந்த்ரா லடாக்கின் இயற்கை மற்றும் சாகச சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும், மத்தியப் பிரதேச சுற்றுலா செயலாளர் இளையராஜா, உஜ்ஜைனி மற்றும் இந்தூர் பகுதிகளில் உள்கட்டமைப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட 25,000 கோடி ரூபாய் முதலீடுகள் குறித்தும் உரையாற்றினர்.









