டெண்டர் முறைகேடு வழக்கு: தமிழகத்தின் இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடு தொடர்பாக இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை நடத்த மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. கே.எஸ். கந்தசாமி மற்றும் பி. விஜய கார்த்திகேயன் ஆகிய அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதியை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) கடந்த புதன்கிழமை வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த 2014 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், சுமார் 98.25 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது, மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அறப்போர் இயக்கம் என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான விசாரணை அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை கடுமையாக விமர்சித்தார். செல்வாக்கு மிக்க நபர்களின் விஷயத்தில் சட்டம் செயல்படுவதில் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது என்பது குறித்து நீதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்த வழக்கில் விசாரணை நடத்த அனுமதி கோரிய கோப்புகள் கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலே நிலுவையில் இருந்தன. இந்த காலதாமதத்தைத் தவிர்க்கவும், சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி தானாக முன்வந்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலாளரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்திருந்தார். தொடர்ந்து நீதிமன்றம் அளித்த அறிவுறுத்தல்களின் விளைவாக, தற்போது மத்திய அரசு இந்த அனுமதி ஆணையைப் பிறப்பித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அருண் அன்புமணி, மத்திய அரசின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, இனி விசாரணை வேகப்படுத்தப்படும் என்றும், தொடர்புடைய நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார். கே.எஸ். கந்தசாமி சென்னை மாநகராட்சியின் பணிகளுக்கான துணை ஆணையராகவும், பி. விஜய கார்த்திகேயன் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றிய காலத்தில்தான் இந்த சர்ச்சைக்குரிய டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.









