சென்னை விமான நிலையம்: முறையற்ற கட்டணம் வசூலிக்கும் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை - இந்திய விமான நிலையங்கள் ஆணையம் எச்சரிக்கை

சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மற்றும் முன்பதிவை ரத்து செய்யும் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இயங்கும் டாக்ஸி நிறுவனங்கள் மற்றும் ஓட்டுநர்கள், பயணிகளிடம் முறையற்ற வகையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மற்றும் உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகளை ரத்து செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர் புகாராக எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் ஓட்டுநர்களைப் பட்டியலிட்டு (Blacklist), அவர்கள் விமான நிலைய வளாகத்திற்குள் வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்படும் எனவும் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், முன்பதிவு செயலிகளில் காட்டப்படும் கட்டணத்தை விடக் கூடுதலாக ஓட்டுநர்கள் பணம் கேட்பதாகத் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பெங்களூருவைச் சேர்ந்த பயணி ஒருவர், செயலி காட்டும் கட்டணத்தைப் புறக்கணித்துவிட்டு, ஓட்டுநர்கள் தாங்களாகவே அதிக விலையைக் கேட்பதாக சமூக வலைதளத்தில் தனது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார். இதேபோல், டெல்லியில் இருந்து வந்த பயணி மார்ட்டின் லூயிஸ் என்பவர், முகலிவாக்கத்திற்குச் செல்ல செயலி மூலம் 450 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் 750 ரூபாய் கேட்டு வற்புறுத்தியதாகத் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். வேறு வழியின்றி அவர் விமான நிலையத்திற்கு வெளியே சென்று ஆட்டோ மூலம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சில ஓட்டுநர்கள் செயலி மூலமாகப் பணம் பெறுவதைத் தவிர்த்துவிட்டு, தங்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்குப் பணத்தை மாற்றச் சொல்லி வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. பயணிகள், உறுதி செய்யப்பட்ட முன்பதிவை ரத்து செய்யும் ஓட்டுநர்கள் அல்லது அதிகக் கட்டணம் கோரும் ஓட்டுநர்கள் குறித்து உடனடியாகப் புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். முதலில் சம்பந்தப்பட்ட டாக்ஸி நிறுவனங்களின் கவுண்டர்களை அணுகித் தீர்வு காண முயற்சி செய்யலாம் அல்லது அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் புகார் பதிவு செய்யலாம்.
பயணிகளின் புகார்கள் மீது உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாகவோ அல்லது 044-22560551, 044-22560512 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டோ புகாரை நேரடியாகத் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட டாக்ஸி நிறுவனங்களுடன் இணைந்து ஆணையம் விசாரணை நடத்தும். விதிமீறல் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது கருணை காட்டப்படாது என்றும், அவர்கள் விமான நிலைய வளாகத்தில் செயல்படுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் ஆணையம் உறுதியளித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டாக்ஸி சேவைகளுக்கான பிரத்யேக கவுண்டர்கள் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.









