சென்னை ராணுவ அகாடமி: லடாக்கின் ஜன்ஸ்கார் பகுதியில் இருந்து முதல் பெண் அதிகாரியாக சாதனை படைத்த ஸ்டான்சின்

லடாக்கின் ஜன்ஸ்கார் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்சின் சாங்யாங், இந்திய ராணுவத்தின் முதல் பெண் அதிகாரியாக சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பதவியேற்றார்.
சென்னை பரங்கிமலையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (Officers Training Academy) நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பு விழாவில், இந்திய ராணுவத்தின் புதிய அதிகாரிகளாக 342 கேடெட்டுகள் முறைப்படி பதவியேற்றனர். இதில், லடாக் யூனியன் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதியான ஜன்ஸ்கார் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ஸ்டான்சின் சாங்யாங், அந்தப் பகுதியிலிருந்து இந்திய ராணுவத்தில் அதிகாரியாக இணையும் முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். கடினமான மலைப்பாங்கான சூழலில் வளர்ந்த அவர், தனது விடாமுயற்சியால் இந்த உயரிய நிலையை எட்டியுள்ளார்.
ஸ்டான்சின் சாங்யாங் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை லே மற்றும் அசாமில் உள்ள தேஜ்பூர் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முடித்தார். பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தேசிய மாணவர் படையில் (NCC) இணைந்ததே தனது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்ததாக அவர் தெரிவித்தார். தனது சொந்த மாவட்டத்தில் ராணுவத்தில் சேர்வதற்கான வழிகாட்டுதல்கள் குறைவாக இருந்த நிலையிலும், மன உறுதியுடன் போராடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். அவருடன் அவரது பெற்றோர்கள் துண்டுப் செரிங் மற்றும் ரிக்ஜின் லடோல் ஆகியோர் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டு தங்களது மகளின் சாதனையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்த விழாவில், ஐந்து தலைமுறைகளாக ராணுவ சேவையில் ஈடுபட்டு வரும் குடும்பப் பின்னணியைக் கொண்ட லெப்டினன்ட் சிவம் அஹ்லாவத் போன்ற பலரும் தங்களின் லட்சியப் பயணத்தைத் தொடங்கினர். மேலும், தேனியைச் சேர்ந்த எம்.ஆர்.ருஸ்வந்த் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் அதிகாரிகளாகப் பொறுப்பேற்றனர். இந்தத் தொகுதியில் மொத்தம் 313 ஆண்கள் மற்றும் 29 பெண்கள் ராணுவத்தில் இணைந்துள்ளனர். இவர்களுடன் சீஷெல்ஸ், தான்சானியா, உகாண்டா, ஜிம்பாப்வே, எஸ்வதினி, பூடான் மற்றும் லெசோதோ உள்ளிட்ட நட்பு நாடுகளைச் சேர்ந்த 17 அதிகாரிகளும் தங்கள் பயிற்சியை முடித்து வெளியேறினர்.
இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, இளம் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள இந்த இளம் அதிகாரிகள், சவாலான பயிற்சிகளைக் கடந்து இன்று தேசத்திற்குப் பணியாற்றத் தயாராகியுள்ளனர். ஸ்டான்சின் சாங்யாங்கின் இந்த வெற்றி, லடாக் போன்ற தொலைதூரப் பகுதி இளைஞர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.









