dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி ABC மையங்களில் தொடரும் முறைகேடுகள்: விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

By K. ராதாகிருஷ்ணன்
87 views
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களில் நிலவும் முறைகேடுகள் மற்றும் நாய்களின் மரணத்திற்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம்.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களில் நிலவும் முறைகேடுகள் மற்றும் நாய்களின் மரணத்திற்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம்.

சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள லாங்க்ஸ் கார்டன் சாலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இணைந்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு (ABC) மையங்களில், முறையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் போதிய பராமரிப்பு இன்மை காரணமாக தெருநாய்கள் உயிரிழப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்ற ஆர்வலர்கள், மாநகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதே பொறுப்பில் அவர் நீடித்து வருவதாகவும், அவர் மீது பல புகார்கள் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மாநகராட்சியின் கீழ் செயல்படும் ABC மையங்களில் பொதுமக்களுக்கும், விலங்குகள் நல அமைப்புகளுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும், அங்கு மறைக்கப்படுவது என்னவென்றும் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி உள்ள நிலையில், இந்த மையங்களில் மட்டும் ஏன் இந்த ரகசியப் போக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்று மார்டினா என்ற ஆர்வலர் ஆவேசத்துடன் வினவினார்.

மேலும், ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்களை மீண்டும் பிடித்து வந்து சித்திரவதை செய்வதாகவும், இது அரசு வகுத்துள்ள விதிகளை மீறும் செயல் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். கத்திப்பாரா பகுதியில் இருந்து ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு, கருத்தடை செய்யப்பட்ட நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் பிடித்து மணலி மையத்திற்கு கொண்டு சென்றதை ஆர்வலர் லியோனல் பிரவீன் சுட்டிக்காட்டினார். இது போன்ற செயல்கள் நாய்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மையங்களில் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு முறையாக வழங்கப்படாததே நாய்களின் மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் கண்ணமப்பேட்டை மையத்தில் உயிரிழந்த நாய், வெறிநாய்க்கடி பாதிப்பு காரணமாகவே இறந்ததாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதை ஆர்வலர்கள் ஏற்கவில்லை. வெறிநாய்க்கடி பாதிப்பு இருந்த நாய்க்கு எப்படி அறுவை சிகிச்சை செய்தீர்கள் என்றும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு சரியாக இருந்திருந்தால் அந்த உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு, முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#சென்னை
#தெருநாய்கள்
#விலங்குகள்நலன்
#மாநகராட்சி
#போராட்டம்
#Chennai
#StrayDogs
#AnimalRights
#GCC
#Protest
#Dhinaanjal
#தினஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications