dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

பதவி உயர்வு கோரி வழக்கு தொடர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

By Admin
17/08/2026
74 views
பதவி உயர்வு கோரி வழக்கு தொடர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பதவி உயர்வு என்பது ஒரு அடிப்படை உரிமையல்ல என்றும், தகுதிகள் இருந்தாலும் அதைக் கோரி வழக்குத் தொடர முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொது நூலகத் துறையில் பணியாற்றும் கண்காணிப்பாளர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. தகுதிகள் இருப்பதால் மட்டுமே ஒரு பணியாளர் தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்று நீதிமன்றத்தின் மூலம் கோரிக்கை வைக்க முடியாது என்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவில், பொது நூலகத் துறையின் கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் என்றும், அவர்களை தரம்-1 நூலகர்களுக்கு இணையாகக் கருதி மாவட்ட நூலக அலுவலர் பதவிக்கு உயர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து நூலகர்கள், கண்காணிப்பாளர்கள், பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் பொது நூலக இயக்குனர் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், பதவி உயர்வு என்பது ஒரு பணியாளரின் உரிமையல்ல என்றும், அத்தகைய கோரிக்கைகளுக்காக தாக்கல் செய்யப்படும் ரிட் மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்றும் தெளிவுபடுத்தினர்.

பதவி உயர்வு கோருவதற்கும், அந்தப் பதவிக்கான தகுதிகளைப் பெற்றிருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். காலிப் பணியிடங்கள் இருப்பதால் மட்டுமே ஒரு பணியாளர் பதவி உயர்வு கேட்டு நீதிமன்றத்தை அணுக முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பதவி உயர்வு என்பது சட்டபூர்வமான உரிமை அல்ல என்பதால், இது போன்ற வழக்குகள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட வேண்டியவை என்று நீதிமன்றம் தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், டிசம்பர் 9, 2025 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி கொண்டு வரப்பட்ட தற்காலிக விதிகளை நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த விதிகளின்படி, தரம்-1 நூலகர்கள் மற்றும் நூலக ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பணிபுரியும் நூலகர் மற்றும் தகவல் அலுவலர்கள் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு பதவி உயர்வு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை மதுரை உயர் நீதிமன்ற கிளை ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்ததை நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#சென்னைஉயர்நீதிமன்றம்
#பதவிஉயர்வு
#தமிழகஅரசு
#நீதிமன்றதீர்ப்பு
#பொதுநூலகத்துறை
#MadrasHighCourt
#PromotionRules
#GovernmentJobs
#TamilNaduNews
#LegalVerdict
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications