சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் குடும்பத்தினரின் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.எம்.செங்குட்டுவனின் குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
முன்னாள் அமைச்சர் பி.எம்.செங்குட்டுவனின் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் பி.எம்.செங்குட்டுவன். அவர் தனது பதவிக்காலத்திற்குப் பிறகு அதிமுகவில் இணைந்தார். அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த சூழலில், பி.எம்.செங்குட்டுவன் காலமானார். எனினும், அவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதன்மை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், அமைச்சரின் மகன்கள் எஸ்.பன்னீர்செல்வம், எஸ்.சக்திவேல், மகள் ஆர்.மீனாட்சி மற்றும் உறவினர் பி.வள்ளி ஆகியோர் சொத்துக் குவிப்புக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தண்டனையை எதிர்த்து அமைச்சரின் குடும்பத்தினர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆய்வு செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் வருமானத்தை விட 160.93 சதவீதம் அதிகமான சொத்துக்களைச் சேர்த்திருப்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது என்று குறிப்பிட்டார். எனவே, கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, தண்டனையை உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்தத் தீர்ப்பின் மூலம் 81.42 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக் குவிப்பு தொடர்பான நீண்டகால வழக்கில் நீதி கிடைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.









