dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தூய்மையான காற்று தரவரிசை: தேசிய அளவில் பின்தங்கிய சென்னை; தமிழகத்தில் திருச்சி முதலிடம்

By Admin
08/09/2026
23 views
தூய்மையான காற்று தரவரிசை: தேசிய அளவில் பின்தங்கிய சென்னை; தமிழகத்தில் திருச்சி முதலிடம்

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 'ஸ்வச் வாயு சர்வேக்ஷன் 2026' தரவரிசையில் சென்னை 35-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் காற்றினைத் தூய்மையாக வைத்திருப்பதற்கான முன்னெடுப்புகள் மற்றும் காற்றுத் தரத்தைப் பகுப்பாய்வு செய்து 'ஸ்வச் வாயு சர்வேக்ஷன் 2026' (Swachh Vayu Sarvekshan 2026) பட்டியலை வெளியிட்டுள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், சென்னை மாநகரம் 35-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த முடிவுகள் சென்னை மாநகராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

இந்தத் தரவரிசைப் பட்டியலில் லக்னோ நகரம் 198 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தூர் மற்றும் ஜபல்பூர் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. பெருநகரங்களின் வரிசையில் ஐதராபாத், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்கள் சென்னையை விட முன்னிலையில் உள்ளன. எனினும், கொல்கத்தா போன்ற சில முக்கிய நகரங்களை விட சென்னை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி நகரம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, 183 புள்ளிகளுடன் தேசிய அளவில் 12-வது இடத்தைப் பிடித்து மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மதுரை நகரம் 132.1 புள்ளிகளுடன் 39-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த ஆய்வு வெறும் காற்றுத் தரக் குறியீட்டை (AQI) மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. சாலைத் தூசிகளைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை, வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையைக் குறைத்தல், தொழில்சாலைக் கழிவுகள், கட்டுமானப் பணிகள் தொடர்பான கழிவு மேலாண்மை மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சுய மதிப்பீடு, மாநிலக் கண்காணிப்புக் குழுக்களின் ஒப்புதல் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கள ஆய்வு ஆகியவற்றின் மூலம் இந்தத் தரவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, சிறப்பாகச் செயல்பட்ட வார்டுகளுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் சென்னை நுங்கம்பாக்கம் வார்டு 110, திருச்சியின் தில்லைநகர் வார்டு 22 மற்றும் திருவேற்காடு நகராட்சியின் வார்டு 11 ஆகியவை அவற்றின் பிரிவுகளில் சிறந்த வார்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் இந்த வார்டுகளுக்கு முறையே 25 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய் மற்றும் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவான நகரங்களின் பிரிவில் தூத்துக்குடி நகரம் போட்டியிட்டு 35-வது இடத்தைப் பிடித்துள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#சென்னை
#காற்றுமாசு
#தூய்மையானகாற்று
#தமிழகசெய்திகள்
#சுற்றுச்சூழல்
#Chennai
#AirQuality
#PollutionControl
#TamilNaduNews
#SwachhVayuSarvekshan
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications