சென்னை முகப்பேர் கிறிஸ்தவ மயானம்: மாநகராட்சி வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முகப்பேரில் உள்ள கிறிஸ்தவ மயானத்தை மாநகராட்சி கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை முகப்பேரில் அமைந்துள்ள கிறிஸ்தவ மயானத்தை பெருநகர சென்னை மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த 66 ஏக்கர் பரப்பளவிலான மயானத்தின் பராமரிப்புப் பணிகள், ஏ. தேவநிதி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மயானத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களிடம் இருந்து அவர் அதிகப்படியான கட்டணங்களை வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்த எஸ். மைக்கேல் பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மயானத்தில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க முதலில் 40,000 ரூபாயும், பின்னர் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் தேவநிதி கட்டணமாக வசூலிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மீறி, தொடர்ந்து பொதுமக்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஏ. தேவநிதி மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் துயரத்தில் இருக்கும் வேளையில், அவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதை நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்தனர்.
இந்தச் சூழலை கருத்தில் கொண்டு, 66 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மயானத்தை முழுமையாக மாநகராட்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். மேலும், வருவாய்த்துறை ஆவணங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, மயானத்தை மாநகராட்சி பெயரில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் உடல்களை அடக்கம் செய்ய எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும், அவ்வாறு யாராவது வசூலித்தால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.









