சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: செப்டம்பர் 30-க்குள் முடிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை செப்டம்பர் 30-க்குள் முடிக்க தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் உத்தரவு.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி அனைத்து பணிகளையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என அவர் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தலைமைச் செயலாளர் சாய் குமார், சென்னையின் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரும் மழைக்கால முன்னேற்பாடுகளை சனிக்கிழமை நேரடியாக ஆய்வு செய்தார். அடையாறு மண்டலத்தில், ஐஐடி பகுதியில் இருந்து வரும் மழைநீரை பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு செல்லும் வகையில், டைடல் பார்க் அருகே 13.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டார். இந்தப் பணிகள் மழைக்காலத்திற்குள் தடையின்றி முடிப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் வலியுறுத்தினார்.
பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட 188-ஆவது வார்டில் மயிலை பாலாஜி நகர் பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் மேம்பாட்டுப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இங்கு முதல் பிளாக்கில் 235 மீட்டர் நீளம் மற்றும் 13 மீட்டர் அகலத்திலான கால்வாய் பகுதி 6.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 4-ஆவது பிளாக்கில் 207 மீட்டர் நீளம் மற்றும் 14.40 மீட்டர் அகலத்திலான பகுதி 8.68 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இதே வார்டில் உள்ள நாராயணபுரம் ஏரியில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
சோழிங்கநல்லூர் மண்டலத்தில், ஓஎம்ஆர் சாலையில் உள்ள துரைப்பாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் திட்டத்தை அவர் ஆய்வு செய்தார். இந்த பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருவதால், இரண்டிற்கும் இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து வரும் உபரி நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு செல்வதே இந்த வடிகால் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பருவமழை காலங்களில் வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் இந்தப் பணிகள் முழு வேகத்தில் நடைபெற வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.









