சென்னையில் அதிரடி வேட்டை: ஐஸ்கிரீம் வேனில் கடத்தப்பட்ட ரூ. 142 கோடி ஹெராயின் பறிமுதல் - இருவர் கைது

சென்னையில் ஐஸ்கிரீம் வேனில் கடத்த முயன்ற 142 கோடி ரூபாய் மதிப்பிலான 71 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.
சென்னையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவில், சுமார் 71.24 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் வேன் என்ற போர்வையில் இந்த போதைப்பொருள் கடத்த முயற்சி நடைபெற்றது வருவாய் புலனாய்வுத் துறையினரால் கண்டறியப்பட்டது. சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலுக்காகத் தமிழகக் கடற்கரைப் பகுதிகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் சோதனையின் போது பிடிபட்ட போதைப்பொருளின் மதிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், உள்நாட்டு சந்தை நிலவரப்படி ஒரு கிலோ ஹெராயினின் மதிப்பு 2 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. அந்த அடிப்படையில், கைப்பற்றப்பட்ட 71 கிலோ ஹெராயினின் மொத்த மதிப்பு சுமார் 142 கோடி ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், மத்திய நிதியமைச்சகத்தின் மதிப்பீட்டுத் தரவுகளின்படி, சர்வதேச அளவில் இதன் மதிப்பு 499 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடப்பு ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஹெராயின் பறிமுதல் நடவடிக்கைகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.
வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்தத் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த ஐஸ்கிரீம் வேன் மற்றும் அதற்குப் பாதுகாப்பாக வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் வழிமறித்து சோதனையிட்டனர். வேனில் ஐஸ்கிரீம்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ரகசிய அடுக்குகளுக்குள் இந்த போதைப்பொருள் பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வாகனத்தில் இருந்த 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இந்த போதைப்பொருளைக் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாகத் தொடர்ச்சியாக நடைபெறும் போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள் பாதுகாப்பு வளையத்தின் அவசியத்தை உறுதிப்படுத்துகின்றன. கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினம் அருகே உள்ள கடற்கரை கிராமம் ஒன்றில் 137 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அந்த கடத்தல் முயற்சியும் இலங்கையை மையமாகக் கொண்டே திட்டமிடப்பட்டிருந்தது. தொடர்ந்து தமிழகக் கடற்கரைப் பகுதிகள் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாகப் பயன்படுத்தப்படுவது குறித்து புலனாய்வு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.









