சென்னை - திருச்சி ரயில் பாதை சீரமைப்பு: இனி 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் பயணம்!

சென்னை எழும்பூர் - திருச்சி இடையேயான இரட்டை ரயில் பாதையில் வேகம் அதிகரிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் முதல் திருச்சி வரையிலான 336.57 கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டை ரயில் பாதையை, தற்போதைய 110 கி.மீ வேகத்தில் இருந்து 130 கி.மீ வேகத்திற்கு உயர்த்தும் விரிவான கட்டமைப்புப் பணிகள் தெற்கு ரயில்வேயால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாட்டுப் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, வழக்கமான ரயில்களின் பயண நேரம் குறைந்தது 20 நிமிடங்களும், வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களின் பயண நேரம் 30 நிமிடங்கள் வரையிலும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கியப் பகுதியாக, தற்போதுள்ள 52 கிலோ எடையுள்ள தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதிக திறன் கொண்ட 60 கிலோ எடையுள்ள புதிய தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும், ரயில்கள் சந்திப்புப் பகுதிகளில் வேகம் குறையாமல் செல்ல வழிவகை செய்யும் வகையில், பழைய சுவிட்சுகளுக்குப் பதிலாக நவீன 'திக் வெப்' (Thick web) சுவிட்சுகள் பொருத்தப்படுகின்றன. தண்டவாளங்களில் உள்ள வளைவுகளைச் சீரமைத்தல், ரயில்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான நவீன சிக்னல் வசதிகளை உருவாக்குதல் மற்றும் கால்நடைகள் தண்டவாளத்தில் நுழைவதைத் தடுக்க வேலி அமைக்கும் பணிகள் எனப் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் இடையேயான பாதையில் மண் சரிவு மற்றும் மென்மையான மண் காரணமாகப் பணிகளை மேற்கொள்வதில் சில சவால்கள் இருந்தன. கருங்குழி, ஒதிவாக்கம் மற்றும் ஒலக்கூர் போன்ற பகுதிகளில் மண் அரிப்பைத் தடுக்க மேம்பாட்டுப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம் வரையிலான பகுதியில் உள்ள 195 ரயில் சந்திப்புகளில், இதுவரை 154 இடங்களில் நவீன சுவிட்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், லெவல் கிராசிங் எனப்படும் ரயில்வே கேட்டுகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை அமைக்கும் பணிகளும் ரயில்வே வழிகாட்டுதல்களின்படி துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த திட்டத்தில், சென்னை எழும்பூர் முதல் முண்டியம்பாக்கம் வரையிலான 162 கி.மீ நீளத்திலான பணிகள் சுமார் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. இந்தப் பகுதி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 174.57 கி.மீ தூரத்திற்கான பணிகள் விழுப்புரம் முதல் திருச்சி வரை தற்போது நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் முடிந்த பிறகு, 143 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இறுதியாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெற்ற பிறகு, 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்குவது அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும்.









