தலைமைச் செயலாளர் விவகாரம்: முதல்வர் விஜய் முடிவெடுப்பார் - அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

தலைமைச் செயலாளர் விவகாரத்தில் முதல்வர் சி.ஜோசப் விஜய் உரிய முடிவெடுப்பார் என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் டாக்டர் எம்.சாய் குமார் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உரிய முடிவை மேற்கொள்வார் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இடதுசாரி கட்சிகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் நடத்தப்படும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைக் கண்காணிக்குமாறு அரசு அதிகாரிகள் சிலருக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPM) கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்த சர்ச்சை குறித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அரசுக்கும் இந்தச் சுற்றறிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். உயர் கல்வித் துறை இன்னும் ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், உயர் கல்வியைத் தமிழக அரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அரசு படிப்படியாகச் செயல்படுத்தி வருவதாக அவர் விளக்கமளித்தார்.
இடதுசாரி அமைப்பினர் தங்களுக்கு எதிராகச் செயல்பட்ட முன்னாள் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கோரிக்கை குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். அந்த அதிகாரி அரசின் உத்தரவின்றி தான்தோன்றித்தனமாகவே செயல்பட்டுள்ளார் என்று அவர் கூறினார். இத்தகைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்குக் கூட முன்கூட்டியே தகவல் தெரியவில்லை என்று கூறிய அமைச்சர், இதில் அரசுக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே ஒரு முக்கிய ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். கோயிலைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக விழாவைக் காண சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்குக் கோயில் கோபுரத்தின் அருகே அனுமதி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.









