குழந்தைகள் தினம்: தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு கேக் வழங்கி கொண்டாடிய முதல்வர் சி.ஜோசப் விஜய்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் சி.ஜோசப் விஜய் கேக்குகளை வழங்கினார்.
தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமாக சிறப்பு நாட்களில் சத்துணவு திட்டத்தின் கீழ் சர்க்கரைப் பொங்கல் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி சிறப்பித்தது புதிய மாற்றமாக அமைந்தது. இந்த நிகழ்வு மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் முதல்வர் நேரில் பங்கேற்றார். அந்தப் பள்ளியில் பயிலும் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 537 மாணவர்களுக்கு அவர் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார். அப்போது மாணவர்களுடன் உரையாடிய முதல்வர், கேக் சுவையாக இருக்கிறதா என்று அன்புடன் விசாரித்தார். பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் இருந்த 40 குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த கேக் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக அரசு 9.27 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. மேலும், அங்கன்வாடி மையங்களில் உள்ள 11 லட்சத்து 11 ஆயிரத்து 22 குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்த பிரம்மாண்டமான விநியோகப் பணிகளை பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இணைந்து ஒருங்கிணைத்தன.
வழங்கப்பட்ட கேக்குகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தனது பெரம்பூர் தொகுதி அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் சி.ஜோசப் விஜய், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து, பல்வேறு சான்றிதழ்களுக்கான விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய அவர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 'வெற்றி நூலகம்' என்ற புதிய நூலகத்தையும் திறந்து வைத்தார்.









