வடகிழக்கு பருவமழை: நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீலகிரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பத்து மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பருவமழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1973-ம் ஆண்டு முதல் நிலச்சரிவு தொடர்பான தரவுகளை ஆய்வு செய்ததில், நீலகிரி மாவட்டத்தில் 490 சம்பவங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 257 சம்பவங்களும், கோயம்புத்தூரில் 238 மற்றும் தேனி மாவட்டத்தில் 91 சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நீலகிரி மாவட்டத்தில் 79 இடங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 24 இடங்களும் மிக அதிக அபாயம் கொண்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மண் சரிவைத் தடுக்கும் பணிகளையும், மலைச் சரிவுகளை உறுதிப்படுத்தும் கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கொடைக்கானல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மண் ஆணி (Soil-nailing) போன்ற தொழில்நுட்பங்களை மற்ற இடங்களிலும் தேவைக்கேற்ப செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து இணைப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். ஏதேனும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டால், உடனடியாக மண் மற்றும் பாறைகளை அகற்றி போக்குவரத்தைச் சீரமைக்கத் தேவையான இயந்திரங்கள் மற்றும் மீட்புக் குழுக்களை முன்னரே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலம் தொடங்கும் முன்பாக இப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பேரிடர் காலங்களில் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒத்திகைகளை (Mock drills) நடத்திப் பார்க்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகள் மட்டுமின்றி, தெற்கு மாவட்டங்களிலும் மழைநீர் வடிகால்கள், பாலங்கள் மற்றும் நீர்வழித்தடங்களை முறையாக ஆய்வு செய்து தூர்வார வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனுடன் சேர்த்து, டெங்கு காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும், பொது சுகாதாரப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தினால் மட்டுமே பெரும் உயிரிழப்புகளையும், பொருட்சேதத்தையும் தவிர்க்க முடியும் என்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இந்த கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.









