dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கோவையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு: உலக இதய தின விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

By Admin
30/09/2026
47 views
கோவையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு: உலக இதய தின விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு மேற்கொண்டதோடு, உலக இதய தின விழிப்புணர்வு பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமைப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை நேரடியாக ஆய்வு செய்தார். இதன்போது, ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பார்வையிட்ட அவர், இந்த வசதியைப் பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்தும் வகையில் உரிய வழிகாட்டிப் பலகைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையின் சுகாதார நிலை குறித்து ஆய்வு செய்த அவர், கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, 66-வது வார்டுக்கு உட்பட்ட தாமஸ் பூங்காவில் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் குழந்தைகள் பூங்காவின் சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை ஆணையர் ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைந்து முடித்து, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், கிழக்கு மண்டலம் 57-வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர், நெசவாளர் காலனியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திற்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்று வரும் மக்கும் குப்பை உர உற்பத்தி மற்றும் கரிமக் கழிவு மேலாண்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோல், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த அவர், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையர் கே.குமாரவேல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வுகளைத் தொடர்ந்து, தாமஸ் பூங்காவில் நடைபெற்ற உலக இதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆணையர், இதய நோய்களைத் தடுப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

எஸ்.என்.எஸ் கல்லூரி, நேரு கல்லூரி, ஜே.கே. கல்லூரி, டெக்ஸ் சிட்டி கல்லூரி மற்றும் பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதய ஆரோக்கியத்தைப் பேணுவது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவர்களின் பங்கேற்புடன், விழிப்புணர்வுப் பேரணியை ஆணையர் கட்டா ரவி தேஜா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தாமஸ் பூங்காவில் தொடங்கிய இந்த பேரணி, ரேஸ் கோர்ஸ் சாலை வழியாகச் சென்று மீடியா டவர் பகுதியில் நிறைவடைந்தது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#கோவை
#மாநகராட்சி
#உலகஇதயதினம்
#விழிப்புணர்வு
#ஆய்வு
#Coimbatore
#CCMC
#WorldHeartDay
#CivicDevelopment
#PublicAwareness
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications